'ஜால்ரா' போட அளவு என்ன?-திமுக விளக்க ராமதாஸ் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

Ramdoss
சென்னை: தோழமை கட்சிகள் எந்த அளவுக்கு 'ஜால்ரா' அடிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி விளக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் நிர்வாக இடங்களுக்கான கல்விக் கட்டணம் கடந்த ஆண்டு ரூ.32,500 ஆக இருந்தது. இந்த ஆண்டு அது ரூ.62,500 ஆக உள்ளது. சுமார் 2 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி பயில்வதில் சிக்கல் ஏற்படும். அந்த மாணவர்களை இது மிகவும் பாதிக்கும்.

போராட்டம் நடத்துவோம்:

இந்த கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து தோழமை கட்சிகளை இணைத்து பாமக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும். இந்த கல்வி கட்டணத்தை சுயநிதி கல்லூரிகளின் வரவு செலவுகளை ஆராய்ந்து முடிவு எடுத்ததாக அரசு அறிவித்திருக்கிறது.

அவர்கள் கல்விச் சேவை புரிந்து திவாலாகி விட்டார்களா என்ன? ஒரு கல்லூரி ஆரம்பித்து 10 கல்லூரி தொடங்கியிருக்கிறார்கள். இப்போது மேலும் 61 புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான மனுக்கள் கோட்டைக் கதவை தட்டுகின்றன.

இந் நிலையில் கல்வி கட்டணத்தை உயர்த்தியது நியாயமா? இதனை திரும்ப பெற்று கல்வித்துறையில் சீர்திருத்தத்தை கொண்டுவராவிட்டால், சிலி நாட்டில் ஏற்பட்டது போல மாணவர் புரட்சி இங்கு உருவாகும். அதன் விளைவுகள் மிக விபரீதமாக இருக்கும்.

இதுதான் கூட்டணி தர்மமா?:

கூட்டணி தர்மம் பற்றி பேசுகிறார்கள். ஆனால் இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு தோழமை கட்சிகளை மதிக்காமல், அவர்களின் கருத்துக்களுக்கு செவி கொடுக்காமல் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். இதுதான் கூட்டணி தர்மமா? இதுதான் கூட்டணி கட்சியை மதிக்கும் செயலா? இதையெல்லாம் சொன்னால் குழி பறிக்கும் செயல் என்று பேசுகிறார்கள். திமுக பொதுக்குழுவிலே கூட எங்களைப்பற்றி விமர்சிக்கிறார்கள்.

தோழமை கட்சிகள் எந்தவித நிபந்தனையுமின்றி திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு தனிக்கட்சி எதற்கு என்று முதலமைச்சர் கருணாநிதியே பேசியிருக்கிறார். ஆனால் அளவுக்கு மீறி பேசுவதுதான் சங்கடம் அளிக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்.

ஜால்ரா அடிக்க அளவு என்ன?:

இதில் என்ன அளவு என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். எந்த அளவுக்கு ஜால்ரா அடிக்க வேண்டும் என்று அவர் சொல்லட்டும்.

கடந்த 2 ஆண்டுகளாக சமூக பொருளாதார அரசியல் பிரச்சனைகளை பாமக கையில் எடுத்து போராடி வருகிறது. இதில் எங்கு எந்த அளவிற்கு அளவு மீறினோம் என்பதை அவர்கள் கூற வேண்டும்.

ஒரு பொறுப்பான எதிர்க்கட்சிக்கு உரிய முறையில் தான் பாமக செயல்பட்டு வருகிறது. இதை கூட இருந்து குழிபறிக்கும் செயல் என்பதா? குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என்கிறார்கள். இது எல்லோருக்கும் பொருந்தும் தானே?.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பொறுத்தவரை ஒவ்வொரு பிரச்சனைக்கும் இடதுசாரிகளை கலந்து பேசுகிறார்கள். ஆனால் நாங்கள் அறிவாலயம் போயே ரொம்ப நாட்களாகிறது. எதாவது ஒரு பிரச்சனை என்றால் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் போட்டு அத்தோடு முடித்து விடுகிறார்கள்.

எந்த பிரச்சனையிலும் தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவித்து விட்டு கூட்டணி கட்சிகள் ஆதரித்தே தீர வேண்டும். ஆதரிக்காவிட்டால் கூட்டணி தர்மம் இல்லை, குழி பறிக்கும் செயல் என பேசுகிறார்கள்.

கூட்டணி தர்மம் ஒரு வழிப்பாதையல்ல:

தி.மு.க. தலைமை மட்டுமல்ல அவர்ளுக்கு துதி பாடும் 'புதிய பூசாரிகளை' கொண்டும் விமர்சனம் செய்வோம் என்று முடிவெடுத்து செயல்படுகிறார்கள். கூட்டணி தர்மம் என்பது ஒரு வழிப் பாதையல்ல.

உதாரணத்திற்கு ஒரு விஷயம் சொல்கிறேன். எங்கள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. வன்னியர் சங்க தலைவர் குரு மீது ஒரு வழக்கு போடப்பட்டது. போலீஸ் விசாரணையில் அது பொய் வழக்கு என்று முடிவானபோதும் கூட, இது பற்றி முதல்வரிடம் நான் முறையிட்ட போதும் கூட அவர் மீதான வழக்கு வாபஸ் பெறப்படவில்லை. இதுதான் அவர்கள் கடைபிடிக்கும் கூட்டணி தர்மம் என்றார் ராமதாஸ்.

தொடர்ந்து ராமதாஸ் கூறுகையில், திமுக-பாமக கூட்டணி தொடருமா என்பதை முதலமைச்சரைத்தான் கேட்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 2011 சட்டமன்ற தேர்தல் வரை எங்களின் 18 எம்.எல்.ஏக்களின் ஆதரவு திமுகவுக்கு உண்டு.

பெட்ரோல் விற்பனை வரியை 2 சதவீதம் குறைத்தது போதாது. மேலும் டீசல், கேஸ் மீதான வரியையும் குறைக்க வேண்டும்.

வார இதழ்களை எல்லாம் முதலமைச்சர், ஆளுங்கட்சியினர் வளைத்துப் போட்டுக்கொண்டு பாமகவுக்கு எதிராக எழுதச் செய்கிறார்கள்.

திமுகவுக்கும் தோழமை கட்சிகளுக்கும் இணக்கமான சூழ்நிலை இல்லை. இது சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களின்போது வெளிப்படையாகத் தெரிந்தது. இதனால் தான் கூட்டுறவு சங்க தேர்தலைக்கூட நடத்த முடியவில்லை என்றார் ராமதாஸ்.

திமுக-அதிமுக எது பெஸ்ட்?:

பேட்டியின் முடிவில், ஒரு செய்தியாளர், அதிமுக கூட்டணி சிறந்ததா?, திமுக கூட்டணி சிறந்ததா? என்று கேட்டார். அதற்கு ராமதாஸ் பதில் ஏதும் அளிக்காமல், சிரிப்பையே பதிலாக அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+