ஊட்டியில் விதிகளை மீறி திமுக கட்டிடம்-அதிமுக
ஊட்டி: ஊட்டியில் திமுக அலுவலகம் விதிகளை மீறி கட்டப்பட்டு வருவதாக அதிமுக புகார் கூறியுள்ளது.
இதுகுறித்து ஊட்டி அதிமுக நகர செயலாளர் கோபாலகிஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீலகிரி திமுகவினர் அமைச்சர் ஒருவர் ஆதரவுடன் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட திமுக அலுவலகம் பல லட்ச ரூபாய் செலவில் ஊட்டியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த கட்டிடம் கட்ட உள்ளாட்சி விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை.
திமுக கட்சி அலுவலகம் மற்றும் வணிக வளாகம் கட்ட நகராட்சியில் பிளான் மட்டும் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த மனுவிற்கு நகராட்சி இன்று வரை முறையாக அனுமதி வழங்கவில்லை.
வணிக வளாகம் கட்ட நகராட்சியில் பல விதிமுறைகள் உள்ளது. வணிக வளாகம் கட்டும் போது கார் பார்க்கிங், செட்பேக் ஆகியவை இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இவை எதுவும் இல்லை.
ஊட்டி நகராட்சி பகுதியில் 1337 கட்டிடங்கள் அனுமதி இன்றியும், விதி முறைகளை மீறியும் கட்டப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் ஊட்டி நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
ஆனால் திமுக அலுவலகம் குறித்து எந்த வித தகவலும் அதில் இல்லை. அது ஏன். திமுக அலுவலம் கட்டப்படுவதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இதற்கு உடனே நகராட்சி அதிகாரிகள் முறையான பதில் தரவேண்டும். இல்லையெனில் இந்த பிரச்சனையை நாங்கள் சட்டபூர்வமாக அனுக வேண்டியிருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications