பெட்ரோலிய நிறுவனங்களின் நவீன மோசடி- ஜெ திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: பிரீமியம் பெட்ரோலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் தாங்களாகவே நிர்ணயித்துக் கொண்டு, அதைத் தான் விற்க வேண்டும் என பங்க் உரிமையாளர்களை நிர்பந்தம் செய்து வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அண்மையில் மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 50 ரூபாயும் உயர்த்தி, ஏழை, எளிய, நடுத்தர மக்களை வாழ்க்கையின் விளிம்பிற்கே தள்ளியதை அனைவரும் நன்கு அறிவர். அதன் விளைவாக, பண வீக்கம் தற்போது 8.75 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் பிரீமியம் பெட்ரோல் மற்றும் டீசல் மட்டுமே விற்கப்படுகின்ற அவல நிலைமை நிலவுகிறது. அதாவது 49 ரூபாய் 64 பைசாவாக இருந்த பெட்ரோல் விலை தற்போது 59 ரூபாய் 20 பைசாவுக்கும், 34 ரூபாய் 44 பைசாவாக இருந்த டீசல் விலை தற்போது 39 ரூபாய் 50 காசு அளவுக்கும் விற்கப்படுகிறது.

அதாவது, பெட்ரோலை லிட்டருக்கு 9 ரூபாய் 70 பைசா கூடுதல் விலை கொடுத்தும், டீசலை லிட்டருக்கு 5 ரூபாய் 6 பைசா கூடுதல் விலை கொடுத்தும் வாங்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு பொது மக்கள் தற்போது தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இது மட்டும் அல்லாமல், என்ஜின் ஆயிலின் விலையும் லிட்டருக்கு 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. பிரீமியம் பெட்ரோல், டீசலை மட்டுமே விற்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் பங்க் உரிமையாளர்களை நிர்பந்தம் செய்வதாக தகவல்கள் வருகின்றன.

எண்ணெய் நிறுவனங்களின் இந்தப் போக்கைக் கண்டித்து பங்க் உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க இருப்பதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன.

இது போன்ற பிரீமியம் வகை பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நிர்ணயிப்பதில்லை. இவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் வசதிக் கேற்ப நிர்ணயித்துக் கொள்ளலாம்.

இந்த நிலை நீடித்தால், மத்திய அரசின் அறிவிப்பு இல்லாமலேயே பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும். இதனால் பாதிக்கப்படுவது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தான்.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை காரணமாக அனைத்துப் பொருட்களின் விலையும் 25 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை உயர்ந்து விட்டது.

எண்ணெய் நிறுவனங்களின் இது போன்ற மறைமுக நடவடிக்கைகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக் கூடும். இதைத் தொடர்ந்து பண வீக்கமும் அதிகரிக்கும்.
மத்திய அரசின் பதவிக் காலம் முடிவுக்கு வரவுள்ள தருணத்தில், மீதம் இருக்கின்ற ஒரு சில மாதங்களில் இன்னும் என்னென்ன இன்னல்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது சுமத்தப்படுமோ என்ற பீதியில் மக்கள் உள்ளனர்.

பெட்ரோலியப் பொருட் ளின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவு இருந்தாலும், மத்திய அரசு அதனை நிறைவேற்றுவதாகத் தெரியவில்லை.

ஆனால், தற்போது மறைமுகமாக மேலும் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
இதற்கு அதிமுக சார்பில் எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு, வழக்கம் போல், சாதாரண பெட்ரோல் மற்றும் டீசலை அனைத்து பங்க்குகளுக்கும் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+