ராஜினாமா வதந்தி-புதுவையில் ரங்கசாமி ஆதரவாளர்கள் பெரும் ரகளை
புதுச்சேரி: கட்சி மேலிட உத்தரவுப்படி முதல்வர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் இறங்கினர்.
புதுவையில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக அவரது எதிர்ப்பாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பலமுனைகளிலிருந்தும் அவருக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. அதிருப்தி கோஷ்டியினர் அடுத்தடுத்து டெல்லிக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரங்கசாமியிடம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டிருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. இதனால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து ரங்கசாமியின் தட்டாஞ்சாவடி தொகுதியில் அவரது ஆதரவாளர்கள் திரண்டு பெரும் ரகளையில் இறங்கினர். அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கினர். மருந்துக் கடைகளையும் பொருட்படுத்தாமல் கல் வீசித் தாக்கினர். இதனால் பொதுமக்கள் பீதியடைந்து ஓடினர்.
இந்த திடீர் கலவரத்தால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சரும், ரங்கசாமியின் தீவிர எதிர்ப்பாளருமான நாராயணசாமியின் இல்லத்தை ரங்கசாமி ஆதரவாளர்கள் தாக்கப் போவதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ரங்கசாமி ஆதரவாளர்களின் இந்த வன்முறையால் புதுவையில் பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications