கல்வெட்டு ஆய்வு- சொந்தப் பணத்திலிருந்து கருணாநிதி ரூ.1 கோடி நிதி
சென்னை: சென்னையில் அமைந்துள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு முதல்வர் கருணாநிதி தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ. 1 கோடியை வழங்கினார்.
தமிழக வரலாற்று பயன்மிக்க கல்வெட்டுகளை ஆய்வு செய்பவர்களுக்கு இந்தப் பணத்தில் இருந்து ஆண்டுதோறும் விருது வழங்கப்படவுள்ளது.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் அலுவலகத்தை திறந்து வைத்து முதல்வரும் செம்மொழி ஐம்பெருங்குழு, எண்பேராயம் தலைவருமான கருணாநிதி பேசுகையில்,
தமிழுக்கு செம்மொழி என்கிற தகுதி உண்டு. அது மறுக்கப்பட்டதாக சொல்ல முடியாவிட்டாலும், அது அனுமதிக்கப்படாத ஒரு சூழல் இருந்ததை மாற்றி செம்மொழித் தமிழ் என்ற அந்த அடையாளத்தை, அந்தப் பெருமையை, எங்கள் மொழிக்கு உரிய பெருமையை வழங்க வேண்டுமென்று மத்திய அரசோடு வாதிட்டுப் போரிட வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால்,
நம்முடைய வாதத்திலே உள்ள உண்மையை-வாய்மையைப் புரிந்து கொண்ட மத்திய அரசு, குறிப்பாக சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் ஆகியோர் தந்த ஒப்புதலின் காரணமாக பரிதிமாற்கலைஞருடைய முதல் குரல், 150 ஆண்டுகளுக்கு முன்பு ஒலித்த அந்தக் குரல், இன்றைக்கு வெற்றி வாகை சூடியிருக்கிறது என்றால் அதற்கான நன்றியினை மத்தியப் பேரரசுக்கு நான் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
தமிழ் மொழியினுடைய வரலாறு என்கின்ற பரிதிமாற்கலைஞர் எழுதிய அருமையான நூலில் தமிழ் மொழியைச் செம்மொழி என்று கூறுவதே பொருத்தமாகும் என்று அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டு அதற்குரிய ஆதாரங்களையெல்லாம் அள்ளி வீசியிருக்கின்றார் அந்த நூல் முழுவதும்.
பரிதிமாற்கலைஞர், சூரியநாராயண சாஸ்திரியாகவே இருந்து தனித் தமிழைப் போற்றி, ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்பு, என் மொழிக்கு செம்மொழி என்று பெயர் சூட்டப்படவேண்டுமென்ற புரட்சிக்கு வித்திட்டார் என்றாலும் கூட,
அதற்கு அடுத்து ஒரு தொடர் முயற்சியாக சொல்ல வேண்டுமேயானால், 1918ம் ஆண்டு தமிழை செம்மொழி என அறிவித்திடுக என்ற ஒரு தீர்மானத்தை நீதிக் கட்சி மாநாட்டிலே நிறைவேற்றியிருக்கிறார்கள்.
இப்படி 1918ம் ஆண்டிலேயே, 90 ஆண்டுகளுக்கு முன்பே, இதற்கான முயற்சி தொடர்ந்து, படிப்படியாக பலவகையான கோரிக்கைகள், அழுத்தந்திருத்தமாக வைக்கப்பட்ட கோரிக்கைகள், அதற்காக நடைபெற்ற சிறு சிறு போராட்டங்கள், தமிழக அரசு கொடுத்த குரல், தமிழ் மக்கள் எழுப்பிய முழக்கம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகத் தான் இந்த முறை, தமிழகத்திலே திமுக தலைமையிலே அமைந்த இந்தக் கூட்டணி சார்பாக மத்திய சர்க்காரிடம் இந்தப் பிரச்சினையை எடுத்துவைத்து எங்களுக்கு இந்தத் தகுதியை எங்கள் மொழிக்கு நீங்கள் தந்தாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.
அதற்கிடையே தமிழகத்திலே நடைபெற்ற பல மாநாடுகளில் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டு, அதன் தொகுப்பையும் நான் டெல்லியிலே பிரதமரிடத்தில், சோனியா காந்தியிடமும், அர்ஜுன் சிங்கிடமும் எடுத்துச் சொன்னபோது, இதிலே நமக்குள்ள பொறுப்பை சோனியா காந்தி போன்றவர்கள் எந்த அளவிற்கு மதித்தார்கள், மகிழ்ந்தார்கள், பெருமையோடு பாராட்டினார்கள் என்பதற்கு சோனியா காந்தி கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி எனக்கு எழுதிய ஒரு கடிதத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அந்தக் கடிதத்தின் ஒரு பகுதியை மாத்திரம் படித்துக் காட்டுகிறேன்.
''தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டியதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்துவிட்டன என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் உள்ள ஒவ்வொரு கட்சியும் செய்த சாதனை, ஆனாலும் குறிப்பாக இந்த பெருமை எல்லாம் உங்களையும் உங்கள் கட்சியையுமே சாரும்'' என்று சோனியா காந்தி எழுதிய கடிதம் காலாகாலத்திற்கும் நான் பத்திரப்படுத்தி வைக்கப்பட வேண்டிய, நான் என்று தவறாகச் சொல்லி விட்டேன், நாம் பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய ஒரு மடல் என்பதை இங்கே தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தமிழ் மொழி செம்மொழியாக ஆகிவிட்ட காரணத்தால், சில பேர் கேட்கிறார்கள்- விலைவாசி குறையுமா? தமிழ் செம்மொழியாக ஆகிவிட்டதால் காவிரி தண்ணீர் வந்து விடுமா? - தமிழ் செம்மொழியாக ஆகி விட்டதால் பட்டினி, பசி நீங்கி விடுமா என்றெல்லாம்.
நாம் அதையும் செய்து விட்டு, தமிழை செம்மொழியாகவும் ஆக்குவோம், ஆக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது.
இதையெல்லாம் மறந்து விட்டு தமிழ் செம்மொழி ஆனால் போதும் - பசி நீங்கி விடும், பட்டினி நீங்கி விடும் என்று நாங்கள் சொல்லவில்லை. இவைகளை விட அவைகள் முக்கியம் என்பதை நாங்கள் மறப்பவர்கள் அல்ல.
செம்மொழியாக நம்முடைய மொழி ஆனதால் என்னென்ன காரியங்கள், செயல்கள் நடைபெறவிருக்கின்றன என்பதை சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன்.
தேசிய அளவில் சிறந்து விளங்கும் தமிழறிஞர் ஒருவருக்கு 5 லட்ச ரூபாய் விருதுத் தொகை கொண்ட தொல்காப்பியர் விருது ஒன்று வழங்கப்படும். அயல் நாட்டுத் தமிழறிஞர்களில் ஒருவருக்கும், அயல்நாடுகளில் வாழும் இந்தியத் தமிழ் அறிஞர்களில் ஒருவருக்கும் தலா 5 லட்ச ரூபாய் விருதுத் தொகை கொண்ட இரண்டு குறள் பீட விருதுகள் வழங்கப்படும்.
தலா ஒரு லட்ச ரூபாய் விருதுத் தொகை கொண்ட இளம் தமிழறிஞர்களுக்கான 5 விருதுகள் வழங்கப்படும். செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் ஆண்டுதோறும் நமது ஜனாதிபதியால் இவைகள் வழங்கப்படும்.
இந்த விருதுகள் 2005-2006, 2006-2007, 2007-2008 ஆகிய 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து வழங்கிடவிருக்கிறோம். ஆக 3 தொல்காப்பியர் விருது, அயல்நாட்டுத் தமிழறிஞர்களுக்கான 3 குறள் பீட விருதுகள், அயல்நாடுகளில் வாழும் இந்தியத் தமிழ் அறிஞர்களுக்கான 3 குறள் பீட விருதுகள், இளம் தமிழ் அறிஞர்களுக்கான 15 விருதுகள்.
மூன்றாண்டுகள் மவுனமாக இருந்து விட்ட காரணத்தால் - வாளாயிருந்து, சும்மாயிருந்து விட்ட காரணத்தால் இப்போது வாளாக மாறி நாம் இந்தப் பணியினை வேகமாக ஆற்ற இருக்கின்றோம்.
தகுதி வாய்ந்த தமிழ்ப் பெருமக்களைத் தேர்வு செய்வதற்குரிய பணிகள்- செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் இன்றே தொடங்குகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
விருது பெறுவோரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் வா.செ.குழந்தைசாமி, எழுத்தாளர் ஜெயகாந்தன், பேராசிரியர் மா.நன்னன் -ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
என் சொந்த பணத்தில் இருந்து ரூ.1 கோடி...
இதைத் தவிர இன்னொரு அறிவிப்பு-என்னுடைய சொந்தப் பொறுப்பில், நான் பெற்றுள்ள அளவிலா மகிழ்ச்சியின் காரணமாக - இங்கே சொல்ல விரும்புகிறேன்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழகத்தில் காலூன்றுகின்ற நாள், பரிதிமாற்கலைஞர் 150 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட கனவு, அந்தக் கனவு நனவாக வேண்டுமென்று 50 ஆண்டுகளுக்கு முன்பே நான் கொண்ட நினைவு இன்று செயலாக்கம் பெறுகின்றது.
இதையொட்டி எனக்கென்று உள்ள சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை இந்த நிறுவனத்தின் பொறுப்பில் 'கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை' ஒன்றினை நிறுவிட வழங்குகின்றேன்.
இந்த ஒரு கோடி ரூபாயை நிரந்தர வைப்புத் தொகையில் அறக்கட்டளையின் பெயரால் டெபாசிட் செய்யப்பட்டு - ஆண்டுதோறும் அந்தத் தொகைக்குக் கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் இந்த மையத்தில் சிறப்பாக தமிழக வரலாற்றுப் பயன்மிக்க கல்வெட்டுகளை ஆய்வு செய்வோருக்கும், கல்லை வெட்டினால் போதாது, கல் வெட்டில் வரலாற்று உண்மைகள் பதிந்திருக்க வேண்டும்.
அந்தக் கல்வெட்டு பழமையானதாக இருக்க வேண்டும். அந்தக் கல்வெட்டு பயன் மிக்கதாக அமைய வேண்டும். அவர்களுக்கு அறக்கட்டளையின் சார்பில் விருதுகள் மற்றும் பொற்கிழிகள் வழங்கப்படும். அரசின் சார்பில் வழங்கப்படுகின்ற விருதுகளைத் தவிர இந்த விருதுகளும் தனியாக ஆண்டுதோறும் வழங்கப்படும் என்றார் கருணாநிதி.
சென்னை : சென்னையில் அமைந்துள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு முதல்வர் கருணாநிதி தனது சொந்தப் பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வில் ஈடுபடுவோருக்கு இந்தப் பணத்தில் இருந்து ஆண்டுதோறும் விருது வழங்கப்பட உள்ளது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் காமராஜர் சாலையில் துவக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
இந்நிறுவனத்தை திறந்துவைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: பரிதிமாற்கலைஞர் 150 ஆண்டுகளுக்கு முன் எழுப்பிய குரல், இன்று வெற்றிவாகை சூடியிருக்கிறது. அதற்கான நன்றியை மத்திய அரசுக்கு தெரிவிக்கிறேன். சூரியநாராயண சாஸ்திரி என்றிருந்த இயற்பெயரை பரிதிமாற்கலைஞர் என தனித் தமிழில் மாற்றிக்கொண்டவர். அவர் எழுதிய, "தமிழ் மொழியின் வரலாறு' என்ற நூலில், "தமிழ் மொழியை செம்மொழி என்று கூறுவதே பொருத்தம்' என, அழுத்தந் திருத்தமாக குறிப்பிட்டு, அதற்குரிய ஆதாரங்களை எல்லாம் அள்ளி வீசியிருக்கிறார்.
அவருக்கு நன்றி செலுத்த அவரது குடும்பத்திலிருந்து 19 உறுப்பினர்களை அழைத்து ரூ.15 லட்சம் நிதி வழங்கியிருக்கிறோம். அவர் பிறந்த வீட்டை நினைவுச் சின்னமாக ஆக்கினோம். மதுரை நகருக்கு அருகில் ஒரு கிராமத்தில், அவர் பிறந்த ஊரில், சொல்லப் போனால் ஒரு பெரிய அக்ரஹாரம், அங்கு எனக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. என் வாழ்க்கையில் முதல் தடவையாக கிடைத்த வரவேற்பு. நீள் வாக்கில் கட்டப்பட்ட மிகச் சிறிய இல்லம். அந்த இல்லத்தை நினைவுச் சின்னமாக்கி அவரது சிலையையும் முகப்பில் அமைத்தோம்.
கடந்த 1918ம் ஆண்டு நீதிக்கட்சி மாநாட்டில், "எல்லா பழமையான மொழிகளைப் போல, பல திறப்பட்ட இலக்கியங்களைக் கொண்டது தமிழ் மொழி. இது பல்கலைக் கழகத்தால் பாரசீக, அரேபிய, சம்ஸ்கிருத மொழிகளுக்கு ஈடாக மதிப்பிடப்பட்டு செம்மொழி என ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செம்மொழி ஆனதால் தேசிய அளவில் சிறந்து விளங்கும் தமிழறிஞர் ஒருவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் விருது தொகை கொண்ட, "தொல்காப்பியர் விருது' ஒன்று வழங்கப்படும். அயல்நாட்டுத் தமிழறிஞர்களில் ஒருவருக்கும், அயல்நாடுகளில் வாழும் இந்தியத் தமிழ் அறிஞர்களில் ஒருவருக்கும் தலா ஐந்து லட்சம் ரூபாய் விருது தொகை கொண்ட குறள்பீட விருதுகள் வழங்கப்படும். தலா ஒரு லட்சம் ரூபாய் விருது தொகை கொண்ட இளம் தமிழறிஞர்களுக்கான ஐந்து விருதுகள் வழங்கப்படும். ஜனாதிபதியால் இந்த விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுகள் 2005-06, 2006-07, 2007-08 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து வழங்கவிருக்கிறோம். தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் குழுவில் வா.செ.குழந்தைசாமி, ஜெயகாந்தன், நன்னன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
என் சொந்தப் பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை இந்த நிறுவனத்தின் பொறுப்பில், "கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை' ஒன்றை நிறுவ வழங்குகிறேன். இந்தத் தொகை நிரந்தர வைப்புத் தொகையில் அறக்கட்டளை பெயரால் "டெபாசிட்' செய்யப்பட்டு, ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டி தொகையைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழக வரலாற்றுப் பயன்மிக்க கல்வெட்டுகளை ஆய்வு செய்வோருக்கு அறக்கட்டளை சார்பில் விருதுகள், பொற்கிழிகள் வழங்கப்படும். அரசின் சார்பில் வழங்கப்படும் விருதுகளைத் தவிர இந்த விருதுகளும் தனியாக ஆண்டுதோறும் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
அவ்வை நடராஜன் வரவேற்றுப் பேசினார். அமைச்சர் அன்பழகன் வாழ்த்திப் பேசினார். சிலம்பொலி செல்லப்பன் நன்றி கூறினார். ஐம்பெருங்குழு, எண்பேராய உறுப்பினர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
-
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
திருச்சி திமுக மாநில மாநாடு LIVE:உங்க அப்பனே வந்தாலும் நடக்காது! பாஜவுக்கு சவால் விட்ட ஸ்டாலின் -
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
மகளிர் உரிமைத் தொகை.. திட்டத்தை அறிவித்த திருச்சியில் நின்று மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தை! -
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி..வைத்தியலிங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா?குறுக்கே வந்த இளைஞர்.. போச்சே -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications