கருணாநிதி தப்புக்கணக்கு-தட்ஸ்தமிழுக்கு ராமதாஸ் சிறப்புப் பேட்டி

காடுவெட்டி குருவை கைது செய்து இந்த மருத்துவருக்கே வைத்தியம் செய்யப் பார்க்கிறார் கருணாநிதி. அதெல்லாம் என்னிடம் நடக்காது. முன்னிலும் வேகமாக வீறு கொண்டு நடைபோடும் பாமக என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
குரு கைது செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து எழுந்துள்ள நிலை குறித்து தட்ஸ்தமிழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
குரு கைது ஏன்?:
குருவின் கைது எங்கள் கட்சிக்கு கலைஞர் விடுத்துள்ள நேரடி மிரட்டல். திமுக கூட்டணியிலிருந்து பாமகவை விலக்கி வைத்திருப்பதாக அவர்களாகத்தான் அறிவித்தார்கள், அதுவும் முடிந்துபோன ஒரு பிரச்சினையைக் கிளறி. அதற்குப் பணிந்து நாங்கள் அவர் காலில் போய் விழுவோம் என தப்புக் கணக்குப் போட்டுவிட்டார். தன்மானத்தில் திமுகவை விட பல படிகள் உயர்ந்து நிற்பவர்கள் இந்தப் பாட்டாளிகள்.
அடுத்து எங்கள் கட்சியிலிருந்து சில நிர்வாகிகளை கட்சி மாறச் சொல்லி வற்புறுத்தி சில நாடகங்களையும் நடத்தினர். சிலரிடம் மிரட்டல், சிலரிடம் பண ஆசை இப்படியெல்லாம் அவர்கள் விளையாடிக் கொண்டிருப்பது எனக்கும் தெரியாமலில்லை.
இந்த நாடகத்தின் அடுத்த காட்சியாகத்தான் எங்கள் தளபதி மாவீரன் குருவைக் கைது செய்திருப்பது. அவர் பெயருக்கு மட்டுமே மாவீரன் அல்ல, உண்மையிலேயே மாவீரன், இரண்டு கோடி வன்னிய மக்களின் தளபதி. எதற்கும் கலங்க மாட்டார். அவர் கைது செய்யப்பட்டதைப் பார்த்து நாங்கள் மிரண்டு போவோம். முக்கிய நிர்வாகிகளை வளைத்துவிடலாம் என்றெல்லாம் கணக்குப் போடுகிறார்கள். அதற்கும் பதிலடி இருக்கிறது எங்களிடம்.
கடைகளை மூடச் சொல்லி பாமக வற்புறுத்துவதாகக் கூப்படுகிறதே...
வன்முறையில் நம்பிக்கையில்லாத இயக்கம் பாமக. இந்த மண்ணில் இனி ஒரு சொட்டு ரத்தம் கூடச் சிந்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. எனவே குரு கைது செய்யப்பட்டதை வைத்து வேறு ஏதேனும் அரசியல் விளையாட்டு நடத்தி அந்தப் பழியை பாமக மீது போடவும் தயங்காது திமுக. மக்கள் விழிப்போடு இருக்கணும். குரு கைது செய்யப்பட்டதற்கு அற வழியில் எதிர்ப்பு காட்டினால் போதும் என்றுதான் நான் ஆரம்பத்திலேயே கூறிவிட்டேனே.
உங்கள் அடுத்த நடவடிக்கை?
கூட்டணிக்குள் இருந்தாலும், ஆட்சியின் அவலங்களைத் தட்டிக் கேட்ட தைரியசாலிகள் நாங்கள். இனிமேல்தான் பாமகவின் பலம் என்ன என்பது கருணாநிதிக்குத் தெரியப் போகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 பிரமுகர்களைக் கைது செய்திருக்கிறார்களே...
நல்ல வேளை மணி மீது அவர்கள் பார்வை படவில்லை. விட்டால் என்னைக்கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தாலும் செய்வார்கள். கலைஞர் எதைச் செய்தாலும் அது சட்டப்பூர்வமானது என்று சாதிப்பார். அதையே மற்ற அரசுகள் செய்தால் அராஜகம் என்பார். குருவின் கைது எதில் சேர்த்தி என்பது பார்த்துக் கொண்டிருக்கிற மக்களுக்கே புரியும்
எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. பயமும் இல்லை. எங்கள் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இனி அவர்களின்றி அரசியலில் ஒரு துரும்பும் அசையாது. யாராக இருந்தாலும் எங்களிடம் வந்தே தீர வேண்டும். இப்போதைக்கு நாங்கள் எந்த விஷயத்திலும் அவசரப்படுவதாக இல்லை. காங்கிரஸ் எங்களைத் தோழமைக் கட்சியாக மதிக்கிறது. அது போதும் என்றார்.












Click it and Unblock the Notifications