தூத்துக்குடியில் லாரி ஸ்டிரைக் நீடிப்பு!!!
தூத்துக்குடி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நடந்த லாரி ஸ்டிரைக் வாபஸ் ஆன நிலையில் தூத்துக்குடி லாரி உரிமையாளர் மட்டும் போராட்டத்தினை இன்னமும் நீட்டிப்பு செய்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 1-ம் தேதி நள்ளிரவு தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று நிறைவடைந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள லாரி உரிமையாளர்கள் மட்டும் பல்வேறு கோரிக்கைகளுக்காக இன்னமும் போராட்டத்தினை நீட்டித்து வருகின்றனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் நுழைவு கட்டணமாக லாரி ஒன்றுக்கு ரூ.70 பெறப்படுகிறது. ஆனால் போதிய இடவசதி செய்து தரப்படவில்லை. இதுபோல் 7வது கப்பல் தளத்தில் இறக்கி வைக்காமல் லாரியில் இருந்து அப்படியே கிரேன் முலம் கப்பலில் ஏற்றுவதால் லாரிகள் ஒரிரு நாட்கள் துறைமுகத்தில் காத்திருக்க வேண்டிய நிலை.
இதனால் லாரி உரிமையாளர்களுக்கு கணிசமான வருமான இழப்பு ஏற்படுகின்றது. மேலும் 8வது கப்பல் தளம் திறக்கப்படாமலேயே உள்ளது. அதை உடனடியாக திறந்து செயல்படுத்த வேண்டும்.
இதுபோல் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவனம் லாரிகளுக்கு ஒரு டன்னுக்கு 56 ரூபாய் தருகிறார்கள். இதை 70 ஆக உயர்த்தித் தர வேண்டும். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வரை லாரி ஸ்டிரைக் நீடிக்கும் என லாரி உரிமையாளர்கள் சங்கம், டேரஸ் உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications