அரசியல் நெருக்கடி: பிரதீபாவின் நடவடிக்கை என்ன?
டெல்லி: அனைத்து சாலைகளும் ரோமை நோக்கி என்பதைப் போல, புதிதாக எழுந்துள்ள டெல்லி அரசியல் நிலவரத்தில், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் எப்படி செயல்படப் போகிறார், அவர் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போதைய நிலையில் குடியரசுத் தலைவரின் நடவடிக்கைதான் மிகவும் முக்கியமானது. தற்போது பிரதீபா முன்பு இரு 'ஆப்ஷன்கள்' உள்ளன.
ஒன்று, பிரதமரை அழைத்து பெரும்பான்மை பலத்தை (நம்பிக்கை வாக்கு) நிரூபிக்கும்படி உத்தரவிடலாம்.
இரண்டாவது, அப்படி செய்யாமல், அரசுக்கு ஆதரவாக உள்ள கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களை வழங்குமாறு உத்தரவிடலாம்.
இந்த நிலையில், புதிதாக ஆட்சி அமைக்கும் அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், அப்படிப்பட்ட அரசைத்தான் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும்படி குடியரசுத் தலைவர் உத்தரவிட முடியும். ஒரு அரசு மீது யாருக்காவது நம்பிக்கை இல்லாவிட்டால், பெரும்பான்மை பலம் இல்லை என்று கருதினால்,அப்படிக் கூறும் கட்சிகள்தான் (எதிர்க்கட்சிகள்) அரசு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
அதேசமயம், ஒரு அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டால், தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக கருதினால் உடனடியாக அதை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இதுதான் ஜனநாயக நடைமுறை. இது மன்மோகன்சிங் அரசுக்கும் பொருந்தும் என்று இன்னொரு தரப்பு சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இப்படி இரு வேறு கருத்துக்கள் விவாதத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் பிரதீபா பாட்டீல் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவரான பின்னர் அவர் சந்திக்கும் முதல் சவாலாக இந்த விவகாரம் அமைந்துள்ளதால், அவர் மீதான எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
--












Click it and Unblock the Notifications