தூத்துக்குடி-ரூ.4,350 கோடியில் வெளி துறைமுகம்
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் விரைவில் ரூ. 4,350 கோடி மதிப்பில் வெளிதுறைமுகம் அமைக்கும் பணிகள் துவக்கப்படவுள்ளன.
இத்தகவலை மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டிஆர் பாலு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துறைமுகத்தின் ஒன்பதாவது சரக்கு தளத்தை, சென்னையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் பாலு தலைமையில் விழா நடந்தது.
விழாவில் பேசிய பாலு கடந்த 1967ம் ஆண்டு தூத்துக்குடியில் துறைமுகம் அமைப்பதற்கு காரணமாக இருந்த பெருமை காமராஜர், முதல்வர் கருணாநிதி ஆகியோரையே சாரும்.
அண்ணாவின் ஆட்சியில் கருணாநிதியின் முயற்சியால் தூத்துக்குடி துறைமுகம் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றது. மத்திய அரசின் கடல் சார் கொள்கை வளர்ச்சி திட்டங்களின் வழியாக மொத்தம் 267 திட்டங்கள் துறைமுகங்களின் வளர்ச்சிக்காக மட்டும் மொத்தம் 60 ஆயிரம் கோடி மதிப்பில் செய்யப்பட்டு வருகிறது. இதில் 24 திட்டங்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி துறைமுகத்தி்ல் மொத்தம் 4371 கோடி செலவில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது.
ரூ.4 ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துககுடி துறைமுகத்தில் வெளிதுறைமுகம் அமைக்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது
இன்னும் ஒரு மாத காலத்தில் 538 கோடி ரூபாய் மதிப்பில் உள்துறைமுகத்திற்கான வளர்ச்சி திட்ட பணிகள் முதல் கட்டத்தை முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார் என்றார் பாலு.
முன்னதாக வீடியோ காண்பரன்சிங் மூலம் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
தூத்துக்குடி துறைமுகம் வரலாற்றுச் சிறப்பு மிகுந்தது. இங்கு நடந்த முத்துக்குளியல் தொழில் உலகப் புகழ் வாய்ந்தது. உலக பேரழகியாகத் திகழ்ந்த கிளியோபாட்ராவின் அழகுக்கு அழகு சேர்த்த முத்துமாலை, தூத்துக்குடி கொற்கை துறைமுகப் பகுதிகளில் எடுக்கப்பட்ட முத்துக்களால் தொடுக்கப்பட்டது என வரலாறு கூறுகிறது.
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து கப்பல் ஓட்டிய வ.உ.சியால் தூத்துக்குடியின் புகழ் இந்தியா முழுவதும் பரவியது.கடந்த 1972ல் தூத்துக்குடியில் வ.உ.சி. சிலை திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் இந்திரா காந்தி, எனது கோரிக்கையை ஏற்று துறைமுகக் கப்பல் வந்து நிற்குமிடத்துக்கு சிதம்பரனார் பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.
அதற்கேற்ப 1975ம் ஆண்டு கட்டி முடித்த இரண்டு கப்பல் தளங்களுக்கும், அதற்கு அடுத்த ஆண்டு கட்டி முடித்த இரண்டு கப்பல் தளங்களுக்கும் வ.உ.சி. பெயர் சூட்டப்பட்டது.அதன் பின் கட்டப்பட்ட புதிய சரக்கு தளங்களுடன் இதுவரை மொத்தம் எட்டு கப்பல் தளங்களைக் கொண்டுள்ள இத்துறைமுகத்தில், தற்போது ஒன்பதாவது சரக்கு தளம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்படுகிறது.
மொத்தம் ரூ.57 கோடி செலவில் ஆறு ஹெக்டேர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஒன்பதாவது தளத்தின் கட்டுமானப் பணிகள், 2006ம் ஆண்டு டிசம்பரில் துவக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது.
335 மீட்டர் நீளமுள்ள, 65 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சரக்கு பெட்டக கப்பல்களையும், 70 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட பிற கப்பல்களையும் கையாள, 12.8 மீட்டர் மிதவை ஆழத்துடன் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த துறைமுகத்தின் உள்துறைமுக மேம்பாட்டுக்கு 11வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில், ரூ. 1,050.54 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கும், வெளித் துறைமுக மேம்பாட்டுக்காக ரூ. 4,350.6 கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டங்கள் அனைத்தும் முடியும் போது தூத்துக்குடி மட்டுமல்ல தென் தமிழகம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழகமும் சமூக பொருளாதார நிலையில், நாட்டின் பிற பகுதிகளின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு முன்னேற்றம் அடையும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications