நம்பிக்கை வாக்கெடுப்பில் அமர்ந்தபடி வாஜ்பாய் வாக்களிக்கிறார்
டெல்லி: லோக்சபாவில் அரசு கொண்டு வரும் நம்பிக்கை தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயும் கலந்து கொண்டு வாக்களிக்கிறார். உடல் நலனைக் கருத்தில் கொண்டு அவர் அமர்ந்தபடி வாக்களிக்க அனுமதி தரப்பட்டுள்ளது.
இப்போதைய நிலையில் ஒவ்வொரு எம்.பியின் வாக்கும் முக்கியம் என்பதால் தங்களுக்கு ஆதரவாக உள்ளவர்களின் வாக்குகளை வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ள அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக உள்ளன.
அந்த வகையில், உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாக்கையும் பாஜக பயன்படுத்திக்கொள்ளவுள்ளது. தீவிர அரசியலில் ஈடுபடாமல் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார் வாஜ்பாய். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடிதான் அவர் எங்கும் செல்ல முடிகிறது.
இந்தநிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக வாஜ்பாய் அழைத்து வரப்படுகிறார். அவர் நாடாளுமன்ற வளாகத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வாக்களிப்பார்.
கடந்த 1998ம் ஆண்டு முதல் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இதுபோல லாபியில் அமர்ந்தபடி வாக்களிக்கும் விதி கொண்டு வரப்பட்டது. அந்த ஆண்டில் பாஜக அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின்போது விஜயராஜே சிந்தியா உள்ளிட்ட 3 பாஜக எம்.பிக்கள் இதுபோல லாபியில் அமர்ந்தபடி வாக்களித்தனர்.
தற்போது இதுபோல வாஜ்பாய் வாக்களிப்பதற்கான சிறப்பு அனுமதியை மக்களவை செயலகத்திடம் மூத்த தலைவர் அத்வானி பெற்றுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து விரையும் தர்மேந்திரா
இதற்கிடையே, மூட்டு அறுவைச் சிகிச்ைச செய்து கொண்டு அமெரிக்காவில் ஓய்வில் இருந்து வரும் பாஜக எம்.பி. நடிகர் தர்மேந்திரா நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக அவசரமாக விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.
இதேபோல பாஜக எம்.பி. மகேஷ் கனோடியா இருதய அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னொரு பாஜக எம்.பியான ஹரீஷ் சந்திர சவான் நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் இருக்கிறார்.
இவர்கள் இருவரையும் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரபாஜக ஏற்பாடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications