சென்னை அருகே திமுக, காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்
சென்னை: சென்னை அருகே உள்ள பீர்க்கங்கரணையில், நடந்த காமராஜர் தினவிழாவின்போது திமுகவினருக்கும், காங்கிரஸாருக்கும் இடையே மோதல் மூண்டது. இருதரப்பினரும் சரமாரியாக அடித்துக் கொண்டனர்.
பீர்க்கங்கரணையில் காமராஜர் நகர், வ.உ.சி. தெருவில் உள்ள அம்மன் கோயில் அருகே காமராஜரின் 106வது பிறந்த தின விழா நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பீர்க்கங்கரணை காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான வளையாபதி தலைமை தாங்கினார்.
விழாவில் பேசிய காங்கிரசார் பீர்க்கங்கரணை பேரூராட்சியில் மக்களுக்கான வளர்ச்சிப் பணிகள் சரியான முறையில் நடைபெற வில்லை என்று குறை கூறியுள்ளனர்.
இதையடுத்து பீர்க்கங்கரணை திமுக செயலாளரும், பேரூராட்சி தலைவருமான ராஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். காங்கிரசாரைப் பார்த்து எங்களை எவ்வாறு தரக்குறைவாக பேசலாம் என்று அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
பந்தலுக்காக போடப்பட்டிருந்த சாமியானாவை திமுகவினர் சாய்த்த தோடு மாணவர்களுக்காக வைக்கப் பட்டிருந்த நோட்டு புத்தகங் களையும் சாலையில் வீசியதாக கூறப்படுகிறது. அதோடு காங்கிரஸ் தலைவர் வளையாபதியின் காரையும் அடித்து நொறுக்கினர்.
இது குறித்து காங்கிரஸ் பிரமுகர் வளையாபதி பீர்க்கங்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதே போல திமுக செயலாளர் ராஜேந்திரன், காங்கிரசார் தங்களை தாக்கியதாக புகார் கொடுத்துள்ளார்.
மேலும் காங்கிரசார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு திரும்பும் போது திமுக பிரமுகர் அப்பாசாமி மற்றும் அவரது மகன் நந்தகுமாரை தாக்கியதாக மற்றொரு புகாரும் காங்கிரசார் மீது கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக மற்றும் காங்கிரசாரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பீர்க்கங்கரணை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications