நம்பிக்கை தீர்மானம்-விவாதம் தொடங்கியது, நாளை ஓட்டெடுப்பு

இன்று காலை அவை கூடியதும் பிரதமர் மன்மோகன் சிங் லோக்சபாவில், 'இந்த அவை அமைச்சரவை மீது நம்பிக்கை வைத்துள்ளது' என்ற ஒரு வரி தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
இதையடுத்து அதன் மீதான விவாதம் தொடங்கியது.
பாஜக தலைவர் அத்வானி விவாதத்தை துவக்கி வைத்து பேசினார்.
மத்திய அரசை அவர் மிகக் கடுமையாகத் தாக்கியபோது அமைச்சர்கள் ஜெய்ப்பால் ரெட்டி, லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் இடையில் பேசினர்.
இதையடுத்து இடைமறித்த சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, நான் இந்த அவையை நடுநிலையுடன் நடத்திக் கொண்டிருக்கிறேன். விவாதத்தில் பேசும்போது விஷயத்தை மட்டும் பேசுங்கள். அநாவசியமாக இடைமறிக்காதீர்கள் என்றார்.
இதையடுத்து தொடர்ந்து விவாதம் நடந்து கொண்டுள்ளது. இதை தூர்தர்ஷன் மற்றும் லோக்சபா டிவி ஆகியவை நேரடியாக ஒளிபரப்பி்க் கொண்டுள்ளன. சுமார் 12 மணி நேரம், இரவு 10 மணி வரை விவாதம் நடக்கும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். ஆனால், விவாதம் நள்ளிரவு வரை தொடரலாம் எனத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து நாளை மாலை பிரதமர் இந்த விவாதத்துக்கு பதிலளித்துப் பேசுவார். அப்போது அணு சக்தி ஒப்பந்தம் மட்டுமல்லாமல் தனது அரசின் சாதனைகளையும் பிரதமர் விளக்குவார் என்று தெரிகிறது. அதைத் தொடர்ந்து இரவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அவ்வப்போது கூச்சலுக்கிடையே விவாதம் நடந்து கொண்டுள்ளது.
முன்னதாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பேசுகையில், இந்த சிறப்புக் கூட்டத் தொடரின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்திருப்பீர்கள். நாடே இந்த கூட்டத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் இன்று காலை விவாதித்தபடி அனைத்துக் கட்சிகளுக்கும் பேசுவதற்கு உரிய அவகாசம் வழங்கப்படும்.
எனவே அனைவரும் அமைதியான முறையில், நாடாளுமன்றத்தின் மாண்பு குலையாமல், முடிந்தவரை கெளவரமான முறையில் விவாதம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications