பெங்களூர்: கோரமங்களா போரம் மால் அருகே இன்றும் ஒரு குண்டு கண்டுபிடிப்பு- செயலிழப்பு

கோரமங்களாவில் போரம் வர்த்தக வளாகத்தின் எதிர்புறம் உள்ள ஹைதராபாத் பிரியாணி ஹோட்டல் அருகே இன்று காலை 11 மணிக்கு இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்றும் போரம் அருகே ஒரு குண்டு செயலிழக்கச் செய்யப்பட்ட நிலையில் இன்றும் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து ஒசூர் ரோட்டில் கோரமங்களா பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் மடிவாளா சில்க்போர்ட் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
அதே போல எம்.ஜி. ரோட்டிலிருந்து மடிவாளா நோக்கி வரும் வாகனங்களும் திருப்பிவிடப்பட்டுள்ளன.
இன்று கண்டுபிடிக்கப்பட்ட குண்டும் நேற்று வெடித்த குண்டுகளி்ன் ரகம் தான் என பெங்களூர் போலீஸ் கமிஷ்னர் சங்கர் பிதாரி கூறியுள்ளார்.
இன்றும் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நகர் முழுவதும் ஆங்காங்கே சோதனைகள் நடந்து வருகின்றன. இதனால் பெங்களூரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
நேற்று வெடித்தவை 9 குண்டுகள்-பலி-1:
இதற்கிடையே பெங்களூரில் நேற்று 9 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. இதில் ஒரு பெண் பலியானார்.
நேற்று மாலை வரை 7 இடங்களில் வெடித்ததாக தகவல்கள் வந்தன. பின்னர் 10 இடங்களில் குண்டுகள் வெடித்தாதக புரளி கிளம்பியது.
இந் நிலையில் 9 இடங்களில் குண்டு வெடித்ததாகவும், ஒரு பெண் மட்டுமே பலியானதாகவும் போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆடுகோடி பகுதியில் மட்டும் 2 குண்டுகள் வெடித்ததாகவும் போலீசார் கூறினர்.
குண்டுகள் வெடித்த இடங்கள்:
முதல் குண்டு ஓசூர்-பெங்களூர் சாலையில் மடிவாளா பஸ் நிறுத்தத்தில் வெடித்தது. இதில் தான் அந்தப் பெண் பலியானார்.
இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஆடுகோடியில் இரு இடங்களிலும், பந்தேர்பாளையா, பெங்களூர்-மைசூர் சாலையில் உள்ள நாயண்டஹள்ளி, விட்டல் மல்லையா ரோட்டில் ஒரு பார்க், ரிச்மண்ட் சர்க்கிள், லாங்போர்டு ரோடு, ஆர்.வி.கல்லூரி பகுதி ஆகிய இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
பகல் 1.20 மணி முதல் மாலை 5.15 மணி வரை இந்த குண்டு வெடிப்புகள் நடந்தன.
மடிவாளா செக்போஸ்ட் அருகே போரம் மால் அருகே ஒரு வெடிக்காத குண்டை போலீசார் கண்டெடுத்து செயலிழக்கச் செய்தனர்.
ராஜாராம் மோகன்ராய் ரோடு பகுதியில் ஒரு பூங்காவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சல்பியூரிக் ஆசிட் கைப்பற்றப்பட்டது.
இந்த குண்டு வெடிப்புகளையடுத்து இன்றும் பல அலுவலகங்களும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு்ள்ளது.
நகர் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்புத்தப்பட்டுள்ளது. பஸ், ரெயில் நிலையங்கள், விமான நிலையம், நீதிமன்றங்கள், மார்க்கெட்டுகள், வழிபாட்டு தலங்கள், திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு சென்ற அனைத்து பஸ்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. பிற வாகனங்களும் எல்லையிலும் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.
குண்டு வெடிப்பில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவியும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000மும் வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
இந் நிலையில் இன்று இன்னொரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications