எல்லையில் ஊடுருவி பாக் தாக்குதல்-இந்திய வீரர் பலி
ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென ஊடுருவி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு இந்திய வீரர் கொல்லப்பட்டார். இதையடுத்து எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பாரமுல்லா மாவட்டம் குப்வாராவில் நவ்காவ்ன் என்ற இடத்தில் நேற்று மாலை இச் சம்பவம் நடந்தது.
இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்குள் பாகிஸ்தானைச் சேர்ந்த 15 வீரர்கள் திடீரென ஊடுருவினர்.
வெள்ளைக்கொடி ஏந்தி வந்த அவர்கள், இந்திய பகுதியில் கண்காணிப்பு பதுங்கு குழி அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் திரும்பிச் சென்றபோது, இந்திய வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், ராஜபுத்திரர் படைப்பிரிவை சேர்ந்த இந்திய வீரர் ஒருவர் பலியானார்.
இதையடுத்து இந்திய வீரர்கள் அவர்களை நோக்கி திருப்பிச் சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே இன்று பிற்பகல் வரை சண்டை நீடித்தது.
இந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே இந்தப் பிரச்சனையை பேசித் தீர்க்கலாம் என இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications