இனியும் முதல்வராகும் ஆசையில்லை, தகுதியானவர்களுக்கு ஆதரவு-கருணாநிதி

வேலூர் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்கும் விழா, வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் ஸ்டாலின் தலைமை வகித்தார். விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
வேலூருக்கு மாநகராட்சி தகுதி வேண்டும் என்று பலகாலமாக தொடர்ந்து வைக்கப்பட்ட கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டு வெற்றி விழாவாகியுள்ளது.
வடஆற்காடு மற்றும் வேலூர் ஆகிய ஊர்கள் மிகுவும் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இந்தியாவின் விடுதலைக்காக முதல் குரல் எழுந்த இடம் வடக்கே உள்ள பகுதி அல்ல, தென்னகத்தில்தான். குறிப்பாக, வேலூர் நகரத்திலேதான். இங்கிருந்த சிப்பாய்கள்தான் அந்த கிளர்ச்சியை நடத்தினார்கள்.
அந்த கிளர்ச்சிக்கு வேலூர் சிப்பாய் கிளர்ச்சி என்றே பெயர் உண்டு.
உண்மையில், விடுதலைப் போராட்டத்துக்கு வேலூரில் நடந்த கலகம்தான் வித்தூன்றியது.
வேலூர் நகரத்தில் சிப்பாய் புரட்சியினுடைய 200வது ஆண்டு நினைவு தினத்தை 10.7.2006ல் கடைபிடித்து, சிறப்பு அஞ்சல் தலையையும் வெளியிட்டேன். வேலூர் கோட்டையில் அதற்கென ஒரு நினைவுத் தூணும் அமைக்கப்பட்டது. இதை என்னுடைய ஆட்சியில் நடந்தது என்பதை நினைத்தபோது இதயத்தில் இனம்காணாத பூரிப்பு ஏற்பட்டது.
இந்தியா சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்கள், அவர்கள் வடக்கே பிறந்தால்தான் சிறப்பாக கருதப்படுகிறார்கள். தெற்கே பிறந்திருந்தால் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் பிறந்திருந்தால் அவர்களுக்கு அந்த சிறப்பு கிடையாது.
வேலூருக்கு விமான நிலையம் வேண்டும் என்று எம்எல்ஏ ஞானசேகரன் கேட்டார். விமான நிலையம் நிச்சயமாக வேண்டும். அதற்கு இடம் தேவை. அந்த இடத்தை பெறும் நேரத்தில் இடையூறு வரும். இடையூறு செய்வதற்காகவே சிலர் அரசியல் நடத்துகிறார்கள்.
அவர்களையெல்லாம் சமாளிக்க வேண்டும். இது மேய்ச்சல் நிலம், பயிர் நிலம் வேண்டும் என்று சொல்பவர்கள் இருப்பார்கள். வேலூருக்கு விமான நிலையம் நிச்சயம் வரும். விரைவில் வரும். ஆனால் எப்போது என்று என்னால் சொல்ல முடியாது.
வேலூர் மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ.10 கோடி மானியம் வேண்டும் என்று நகராட்சி தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் தீர்மானம் போட்டார்கள். முதல்கட்டமாக ரூ.5 கோடி அனுமதித்துள்ளோம்.
ஈரோட்டை மாநகராட்சியாக்கினோம். அப்போது ஒரு குறிப்பை ஸ்டாலின் தந்தார். அதில், 1917ல் ஈரோடு நகராட்சி தலைவராக இருந்த தந்தை பெரியார், இந்த ஈரோடு நகரம் அளவில் எல்லையில் குறைவாக இருப்பதால் பக்கத்தில் உள்ள ஊர்களை ஈரோடு நகராட்சியோடு சேர்க்க வேண்டும்.
அப்படி சேர்த்தால் எதிர்காலத்தில் மாநகராக ஆகும் என்று எழுதியிருக்கிறார். அதன் அடிப்படையில் வீரப்பன்சத்திரத்தை ஈரோட்டுடன் இணைத்து ஈரோடு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல வேலூர் மாநாகராட்சியுடன் பல ஊர்கள் இணைக்கப்படும்.
முதல்வர் ஆசை இல்லை:
5-வது முறையாக முதல்வராக இருக்கிறேன். இனி முதல்வராக வேண்டும் என்ற ஆசை எனக்கு கிடையாது. அந்த ஆசைக்கு கருணாநிதி அடிமையாக மாட்டான். இன்னும் ஒரு முறை முதல்வர் ஆக வேண்டும் என்று கேட்கின்றனர். நான் அப்படி ஆசைப்பட மாட்டேன்.
யார் தமிழகத்தை ஆளக்கூடிய தகுதியை பெறுகிறார்களோ, யாருக்கு மக்கள் அந்த ஆதரவை தருகிறார்களோ அவர்களை ஊக்குவிக்கின்ற, அவர்களை மேலும் ஆர்வத்தோடு பணியாற்ற வைக்கும் தூண்டுகோலாக இருப்பேன். இனி எனக்கு செங்கோல் தேவை இல்லை. தூண்டுகோல் போதும். அதை வைத்து நான் இந்த நாட்டில் இன்னும் பல அற்புதங்கள், அதிசயங்களை, சாதனைகளை ஆக்க முடியும்.
காலை முதல் மாலை வரை உழைத்து அலுத்த மக்களை காப்பாற்ற வேண்டும். இன்னும் சுதந்திரத்தினுடைய உண்மையான தன்மையை ஏழை மக்கள் அனுபவிக்கவில்லை. அதன் சுவையை முழுமையாக இந்திய மக்கள் பெறவில்லை.
அதற்கு யார் யார் உழைக்கிறார்களோ, யார் தியாகம் செய்ய முன்வருகிறார்களோ, அவர்களுக்கு தோழனாக, பணியாளனாக, விசுவாசமான வேலைக்காரனாக இருந்து, உற்ற தோழனாக இருந்து, உழைப்பேன், உழைப்பேன், உயிருள்ளவரை உழைப்பேன்.
அப்படி உழைக்கும் பாதையில் ஒரு வெற்றிப்படிக்கட்டாகத்தான் வேலூரில் இந்த மன்றத்தை காண்கிறேன். இது வேலூர் மக்கள் சாதனை என்று ஒத்துக்கொள்கிறேன், இது என்னுடைய சாதனையோ, ஸ்டாலினின் சாதனையோ அல்ல. அமைச்சரவை, மாற்றுக் கட்சிக்காரர்களின் சாதனை.
எல்லோரும் சேர்ந்து இழுத்தால்தான் தேரை இழுக்க முடியும். ஊர் கூடி தேர் இழுப்போம். உலகத்தார் எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம். இன்று நாசகார செயலை பார்க்கிறோம். எதிர்க்க முடியாமல் திகைக்கிறோம். தீய சக்திகளை விலக்கிட நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாடுபடுவோம். அதை இந்த விழாவில் ஒரு சூளுரையாக எடுப்போம் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications