மன்மோகன்தான் பிரதமர் வேட்பாளர்-காங்கிரஸ்
டெல்லி: வரும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மன்மோகன் சிங்கே இருப்பார் என்பதில் கட்சி உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.
வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள டெல்லி அரசியல் தயாராகி வருகிறது. பாஜவின் பிரதமர் வேட்பாளராக அத்வானியை அக்கட்சி அறிவித்தது. மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலையும் வெளியிட்டது.
இந்நிலையில் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்கலாம். அவருக்கு அந்த தகுதி உள்ளது என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் தெரிவித்தார். கட்சியில் சலசலப்பை ஏற்படுத்திய இந்த கருத்து ஒருவழியாக அடங்கியது.
கடந்த மாதம், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை, அணு ஒப்பந்தத்தை காரணம் காட்டி இடதுசாரிகள் வாபஸ் பெற்றன. வரும் பொதுத் தேர்தலில் உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி பிரதமராக போட்டியிட தங்களின் ஆதரவையும் இடதுசாரிகள் தெரிவித்தன.
இந்நிலையில், தற்போது பிரதமராக உள்ள மன்மோகன் சிங்கே வரும் தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என்று அக்கட்சி தற்போது திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியதாவது: தற்போது பிரதமராக உள்ள மன்மோகன் சிங்கே வரும் தேர்தலும் பிரதமர் வேட்பாளராக இருப்பார். பிரதமர் பதிவிக்கு வேறொரு வேட்பாளரை நிறுத்தும் உத்தேசம் இல்லை. இது தொடர்பாக யாரும் விண்ணப்பிக்கவும் இல்லை. அதற்கான சூழலும் ஏற்படவில்லை.
பிரதமர் வேட்பாளராக அனைத்து கட்சியினரும் ஒருவரை முன்னிறுத்தி உள்ளது. கனவு காண உரிமை அனைவருக்கும் உள்ளது. ஆனால் யதார்த்தம் என்று ஒன்று உண்டு. கனவு காண்பவர்கள் யதார்த்த வாழ்வுக்கு திரும்பித்தான் ஆக வேண்டும் என்றார்.
இது தொடர்பாக மூத்த மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவிக்கையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான அணு ஒப்பந்தத்தை கடும் போராட்டத்துக்கு இடையே வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
தற்போது மிகச் சிறந்த தலைவராகவும் அவர் விளங்குகிறார். எனவே அடுத்த தேர்தலிலும் அவரே பிரதமராக இருப்பார். மாநில முதல்வராக இருப்பவர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக தொடர்வாரோ, அதேப்போல பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்றார்.
அடுத்து வரும் தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மன்மோகன் சிங்கே பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன் மத்திய அமைச்சர் சரத் பவார் கூறினார். அப்போது கூட்டணியில் உள்ள கட்சிகள் மொனமாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications