லஞ்சம்: இன்ஸ்பெக்டர், 4 போலீசார் சஸ்பெண்ட்
சிவகங்கை: கஞ்சா வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டிய இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள கீழக்கரை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் யூசுப் சீனி. இவரது வீட்டிற்கு சிவகங்கை மாவட்ட போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொம்மு தலைமையில் 4 போலீசார் சென்றனர். அப்போது போதை பொருள் கடத்தியதாக யூசுப் சீனியை அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது வழக்குப்பதிவு செய்தால் 14 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். அதனால் ரூ.5 லட்சம் கொடுத்தால் விட்டு விடுகிறோம் என்று போலீசார் மிரட்டியதாக யூசுப் சீனியின் மகன் நவாஸ் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியிடம் புகார் செய்தார்.
சம்பந்தப்பட்ட போலீசாரை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் அவர்களை கண்காணித்தனர். இதையடுத்து ராமநாதபுரத்திற்கு வந்து பணம் கொடுப்பதாக நவாஸ் கூறினார். அதன்படி, இன்ஸ்பெக்டர் பொம்மு, ஏட்டுகள் தமிழ்செல்வன், ராஜகோபால், சேரந்தையன், ஜானகிராம் ஆகியோர் நவாசிடம் பணத்தை வாங்கினர்.
அப்போது அங்கு மறைந்திருந்த தனிப்படை போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் பொம்மு உள்பட 5 போலீசாரையும் சஸ்பெண்ட் செய்து மதுரை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜி அருணாச்சலம் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications