சுதந்திர தினம்: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நெல்லை மற்றும் சென்னையை தகர்க்கும் தீவிரவாத சதித் திட்டம் அம்பலமானது. இதுதொடர்பாக அப்துல் கபூர், ஹீரா, அலி அப்துல்லா உள்ளிட்டோர் பிடிபட்டுள்ளனர்.
இவர்களின் சதித் திட்டத்தில் சென்னை மற்றும் நெல்லையின் முக்கிய இடங்கள், முக்கிய நபர்கள் இருந்ததால் இந்த இரு நகரங்களிலும் வரலாறு காணாத பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த 11 பேரை பிடிக்கவும் வலை விரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்னும் சிக்காததால் ஆபத்து முழுமையாக நீங்கவில்ைல என்று போலீஸ் கருதுகிறது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகரில் 50 சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர வாகன கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழா கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும் கோட்ைடக் கொத்தளத்தில் மிக பலத்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு 4 அடுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 15 சோதனைச் சாவடிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையம், முக்கிய ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், கடற்கரைகள், முக்கிய கட்டட வளாகங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் ..
கோவை நகரில் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கியமான 28 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள புறநகர் பேருந்து நிலையங்கள், பெரிய கடை வீதி, அரசு மருத்துவமனை, ஒப்பனக்கார வீதி, மத்திய சிறைச்சாலை அமைந்துள்ள இடம் உள்ளிட்ட 28 இடங்களில் தானியங்கி கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.
கமிஷனர் அலுவலகம் மற்றும் கோவை ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் இதற்கான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை செய்து வருகிறார்கள்.
சரவணம்பட்டி, இருதூர், குனியமுத்தூர், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வெளியூர்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் போலீசாரின் தீவிர சோதனைக்குப் பிறகே கோவை நகருக்குள் செல்ல அனுமதிக்கப் படுகின்றன.
சிறப்பு புலனாய்வு பிரிவு உள்ளிட்ட மொத்தம் நான்கு ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டு இரவு பகலாக கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
மதுரையில் ..
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஏற்கனவே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது அந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர வழிபாட்டு நிலையங்கள் மக்கள் நெருக்கடி மிக்க பகுதிகள், ரயில்நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லையில் ...
நெல்லையில் நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், பதட்டம் நிறைந்த பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசியிலும் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications