எம்பிபிஎஸ் கவுன்சிலிங் தாமதம்: பறிபோன 97 இடங்கள்-ராமதாஸ்
சென்னை: மருத்துவ கவுன்சிலிங்கில் தனியார் கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்க வேண்டிய 97 இடங்கள் பறிபோயுள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் கவுன்சிலிங்கில் எவ்வித கால தாமதமும் இல்லை, கடந்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கால அட்டவணையின்படி தான் இந்த ஆண்டு கவுன்சிலிங்கும் நடைபெறுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஒரு அரசின் வலிமை மக்களின் அறியாமையில் அடங்கியிருக்கிறது என்று என்றைக்கோ சொல்லி வைத்ததை இன்றைக்கும் திமுக அரசு நம்பி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.
கடந்த ஆண்டில் மருத்துவக் கல்வி இயக்குனர், மாணவர் கவுன்சிலிங்கிற்கான அட்டவணையை 6.7.07ல் வெளியிட்டு இருக்கிறார். அதன்படி 9.7.07 முதல் 16.7.07 வரையில் முதல் கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டிருக்கிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகள், சாலைப் போக்குவரத்து நிறுவனத்தாரால் நடத்தப்படும் பெருந்துறை மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்களும் முதல் கட்ட கவுன்சிலிங்கின்போது நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அவ்வாறே கலந்தாய்வு நடந்து முடிந்திருக்கிறது.
ஆனால் இந்த ஆண்டு கவுன்சிலிங் அட்டவணை திட்டமிட்டே மாற்றப்பட்டிருக்கிறது. 4.7.08 முதல் 8.7.08 வரையில் முதல் கட்டக் கவுன்சிலிங் நடந்தது. இரண்டாம் கட்டக் கவுன்சிலிங் 11.8.2008ம் தேதி தான் தொடங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டைப்போல சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இந்த ஆண்டு முதல் கட்டக் கவுன்சிலிங்கில் நிரப்பப்படவில்லை.
இரண்டாம் கட்ட கவுன்சிலிங் உடனடியாக தொடங்கப்படாமல் 34 நாட்கள் இடைவெளிவிட்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த காலதாமதத்தை செட்டிநாடு மருத்துவ கல்லூரி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நிகர்நிலை பல்கலைக்கழகம் என்ற தகுதியை பெற்று விட்டது.
இதனால், இந்த மருத்துவக் கல்லூரியில் இருந்து இந்தாண்டு அரசு ஒதுக்கீட்டிற்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் போய் விட்டது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்கள் இடஒதுக்கீடு சலுகையின்படி இந்த கல்லூரியில் இலவசமாக பெறவிருந்த சுமார் 70 இடங்கள் இதனால் பறிபோயிருக்கிறது. இந்த இழப்பிற்கு யார் பொறுப்பு?
கடந்தாண்டு முதல் கட்ட கவுன்சிலிங்கின்போதே, சுயநிதிக் கல்லூரிகளுக்கான இடங்களை நிரப்பியிருக்கும் நிலையில் இந்தாண்டு மட்டும் அதனை இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு தள்ளி வைத்தது ஏன்? இதற்கு யார் பொறுப்பு? இவையெல்லாம் தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பில்லை.
திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது என்று கருதுவதற்கு இடம் இருக்கிறது.
இவைகளுக்கெல்லாம் பொறுப்பானவர்கள் யார்? இடஒதுக்கீட்டு சலுகையின்படி பயன்பெற இருந்த மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 70 இடங்கள் உள்ளிட்ட 97 இடங்கள் பறி போனதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதையும் அதன் பின்னணியும் கண்டறிய முழுமையான விசாரணை நடத்த தமிழக அரசு முன் வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications