பாமக, கம்யூ. முன்வந்தால் கூட்டணிக்குத் தயார் - ஜெ.

கொடநாடு எஸ்டேட்டில் நான்கு மாதம் ஓய்வெடுத்து வந்த ஜெயலலிதா சமீபத்தில் சென்னை திரும்பினார். இந்த நிலையில் நேற்று மாலை அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை அவர் கட்சி தலைமையகத்தில் கூட்டினார்.
இதில் அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை ஜெயலலிதா சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து இன்று விவாதிக்கப்பட்டது.
செப்டம்பர் 15ம் தேதி தமிழகம் முழுவதும் மற்றும் அதிமுக செயல்படும் பிற மாநிலங்களில் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது, இனிப்புகள் வழங்குவது, கூட்டங்கள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னையில் நான் இருந்தாலதான் அரசியலில் ஈடுபடுவது போலவும், வேறு எங்கேயாவது தங்கினால் ஓய்வு எடுப்பது போலவும் கூறுவது பொருத்தமானதல்ல.
கடந்த நான்கு மாத காலமாக நான் எங்கேயும் போய் விடவில்லை. தமிழகத்தில்தான் இருந்தேன். அங்கிருந்தபடியே அரசியல்நடப்புகளை கூர்ந்து கவனித்து, அரசியல் நடத்திக் கொண்டிருந்தேன்.
அரசியல் பணி, கட்சிப் பணி ஆற்றினேன். அறிக்கைககள் மூலம் நாட்டு நடப்புகளில் எனதுகருத்துக்களை தெரிவித்து வந்தேன். ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் அறிவித்தேன். தமிழ்நாட்டு அரசியலைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் எங்கிருந்தும் அரசியல் நடத்தலாம்.
எந்தக் கூட்டணியிலும் அதிமுக இல்லை:
தற்போது அதிமுக எந்தக் கூட்டணியிலும் இல்லை. கூட்டணி தொடர்பாக எங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. கூட்டணி என்பது தேர்தலுக்கு முன்பாகத்தான் முடிவுசெய்யப்படும்.
நாங்கள் கூட்டணிக்குத் தயாராகவே இருக்கிறோம். அதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது.
பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஏன் கூட்டணி அமைக்க முடியாது. நேரம் வரும்போது நட்பு கட்சிகள், ஒத்த கருத்துக்களை உடைய கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச அதிமுக தயாராகவே உள்ளது.
விஜயகாந்த் கட்சியுன் கூட்டணி குறித்து பேசுவது குறித்து பதில் கூற விரும்பவில்லை. அதிமுகவுடன் விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்டவர்கள் இணைந்து செயல்படுவது குறித்து அவர்கள் கேட்கட்டும்.
பாஜகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு இப்போது சூழல் எழவில்லை என்றார் ஜெயலலிதா.
மாயாவதி பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவது போல உங்களிடம் அப்படிப்பட்ட எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. விவசாயிகள், நெசவாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கடுமையான மின் தட்டுப்பாடு, மாநில பொருளாதாரம் சீர்கேடு அடைந்துள்ளது.
இவற்றையெல்லாம் அகற்ற, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு என்னிடம் உள்ள ஒரே எண்ணம் என்றார்.
ஓகனேக்கல் குறித்து கேட்டபோது, ஓகனேக்கல் விவகாரத்தில் மீண்டும் சர்வே நடத்த வேண்டும் என கர்நாடக முதல்வர் கூறியுள்ளதை ஏற்க முடியாது. மொழி வாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோதே தேவையான அளவைகள் நடத்தப்பட்டுள்ளன. ஓகனேக்கல் தமிழகத்தின் ஒரு பகுதி என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கான அனுமதி எல்லாம் பெறப்பட்டு விட்டது. கர்நாடகம் இதில் தலையிட அந்த அதிகாரமும், உரிமையும் இல்லை. தமிழக அரசு இந்த விஷயத்தில் உறுதியாக, தைரியமாக இருந்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகளின் கருத்தோடு இணைந்து அதிமுக செயல்பட்டதில் எந்த விசேஷ காரணமும் இல்லை. தேசிய அளவில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், தேச நலனுக்கு உகந்த முடிவைத்தான் அதிமுகவும் நானும் எடுத்திருக்கிறோம். இது தற்செயலாக நிகழ்ந்த ஒற்றுமை.
காங்கிரஸ் கட்சியுடனேயே கூட்டணி சேர்ந்த கம்யூனிஸ்டுகளால் ஏன் எங்களுடன் இணைந்து செயல்பட முடியாது என்றார் ஜெயலலிதா.
சிரஞ்சீவியும் அரசியலுக்கு வருகிறாரே என்ற கேள்விக்கு இதுவரை தமிழ்நாட்டில் ஏற்பட்ட வியாதி தற்போது ஆந்திராவுக்கும் பரவியுள்ளது என்றார் ஜெயலலிதா.
கட்சி அலுவலகத்திற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயலலிதா வந்ததால் பெருமளவிலான அதிமுக தொண்டர்கள் திரண்டு வந்து ஜெயலலிதாவுக்கு தடபுடலான வரவேற்பை அளித்தனர்.












Click it and Unblock the Notifications