தமிழகத்தில் உஷார் நிலை-கோவில்களி்ல் பலத்த பாதுகாப்பு
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்திலும் பாதுகாப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் இரவு பகலாக சோதனையிடப்பட்டு வருகின்றன.
மதுரை மீனாட்சியம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய முருகன் கோயில்கள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் என பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய கோயில்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதே போல சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றிலும் கண்காணிப்பு மற்றும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதிக்கப்படுகின்றன. பார்சல்கள் மெட்டல்டிடெக்டர் மூலம் தீவிர சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
பயணிகள் தவிர ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் மற்றவர்களுக்கு தங்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஹோட்டல்கள், லாட்ஜ்கள் போன்ற தங்கும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சந்தேகப்படும் நபர்கள் உடனடியாக காவல் துறையினரால் பிடித்துச் செல்லப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கப்பல் மூலம் ரோந்து
கடலோர பகுதிகளில் தீவிரவாதி களின் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்புப் படை, கடற்படையின் படகுகள் மற்றும் கப்பல்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.
சென்னையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கமிஷனர் சேகர் தலைமையில் கூடுதல் போக்குவரத்து கமிஷனர் சுனில்குமார், இணை கமிஷனர்கள் அபய்குமார் சிங், பாலசுப்பிரமணியன், குணசீலன், துணை கமிஷனர்கள் லஷ்மி, ஸ்ரீதர், முத்துசாமி, பாண்டியன், மவுரியா, காமினி மற்றும் போலீசார் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர்.
தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 37 சோதனைச்சாவடிகள் அமைக்கப் பட்டு லாரிகள் மற்றும் வாகனங்கள் தீவிர தணிக்கைக்கு ஈடுபடுத்தப் பட்டது.
முக்கிய வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையம் என அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தலைமைச் செயலகத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப் படுகின்றனர்.
சுதந்திர தினத்தையொட்டி கடற்கரை சாலை மற்றும் ராஜாஜி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை புறநகர் பகுதிகளில் கமிஷனர் ஜாங்கிட், துணை கமிஷனர்கள் ராமசுப்பிரமணியன், பாலநாகதேவி, வரதராஜன் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications