கருணாநிதியின் 'அவாள்' கவிதையால் சலசலப்பு
சென்னை: முதல்வர் கருணாநிதி பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் குறித்து பூடகமாக எழுதியுள்ள கவிதை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி தனது கவிதையில் சாடியிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜனைத்தான் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
முதல்வர் கருணாநிதியின் கவிதைகள் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்துவதுண்டு. ஆனால் நேற்று அவர் வெளியிட்டுள்ள கவிதை ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், அந்தக் கவிதையில் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் குறித்து கருணாநிதி பூடகமாக சாடியுள்ளார். யார் அந்தத் தலைவர் என்பது யாருக்குமே புரியவில்லை. இதனால் இந்தக் கவிதை பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
முதல்வரின் அந்தக் கவிதை இதோ...
அரசியலில் பொதுவாழ்வில்; ஏன், தனி வாழ்வில் கூட;
அனைவரையும் நம்பிவிடும் "அறியாமை'' என்றைக்கும் அடியேனுக்கு உண்டு!
அடடா; அவர்கள் காரியமாகும் வரையில் நம் கரத்தைக் குலுக்குவதென்ன.....
அம்மவோ; காலைப்பிடிப்பது தான் என்ன? என்ன? என்ன?
அடிச்சது "சான்ஸ்'' கிடைச்சது "வாய்ப்பு'' என்றதும்
"ஆத்துக்காராள்'' காட்டிய அன்பும் நன்றியும் கூட
ஆலாய்ப்பறந்துவிடும்; ஆவியாகி மறைந்து விடும்.
ஆயிரத்தில் ஒருவன் இவர்-ஆயுள் மட்டும் மறக்க மாட்டார்! அனுபவிக்கும் பதவி, அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல;
"அவன் போட்ட பிச்சை'' யென்று அன்றாடம் நினைத்திருப்பார்;
அப்படியொரு அழுத்தமான எண்ணங்கொண்டு அசைத்துப் பார்த்தேன்
அடிமரம் ஒட்டிய கிளையொன்றை!
அடடா-கொடிய பூச்சிகளும் கொட்டும் தேள் கூட்டமும்
படிப்படியாய் அளந்து போட்டது போல் பாவி மனிதன் தலையிலிருந்து
படபடவென உதிர்ந்தென்னைத் தாக்கியதைக்கண்ட பின்பே
உணர்ந்து கொண்டேன்;
"அவாள்'' நமக்கு எப்போதும் "சவால்'' தான் என்ற உண்மை!
உம்மையும் ஏமாற்ற உச்சி முதல் உள்ளங்கால் வரையில் கடும் விஷம் மொண்டு-
கலகலப்பு சிரிப்பு காட்டி வருகின்ற கயவர்களின்
நன்றியில்லா உள்ளம் கண்டு நாய்கள் கூட சிரிக்குமய்யா!
இதுதான் முதல்வரின் கவிதை.
இந்தக் கவிதை முதல்வர் அவாள் என்று கூறியிருப்பது யாரை என்பதுதான் இப்போது யாருக்குமே புரியாத புதிராக மாறியுள்ளது. பலருடைய பெயர்களை இணைத்து அனைவரும் யோசித்துப் பார்க்கும் நிலைக்கு முதல்வரின் கவிதை தள்ளி விட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வரதராஜனை சொல்கிறாரா (வரதராஜன் பிராமணர் என்பது பலருக்கும் தெரியாது) அல்லது தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதியை சொல்கிறாரா அல்லது தயாநிதி மாறனின் மனைவி பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களை தாக்கியுள்ளாரா என்பது குறித்து பெரும் விவாதமே நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களிலும் கருணாநிதியின் கவிதைதான் இன்று விவாதப் பொருளாகியுள்ளதாம். யாருடைய பெயரை இப்படி மறைமுகமாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார் என்று டீயை விட படு சூடாக இருக்கிறதாம் விவாதம்.
ஆனால் முதல்வரின் கவிதையைப் படித்தால் அது ஒன்று திரிபாதியாக இருக்க வேண்டும் அல்லது வரதராஜனாக இருக்க வேண்டும் என்றுதான் பலரும் கூறுகிறார்கள். திரிபாதி சமீபத்தில் முதல்வரின் கோபத்திற்கு ஆளானார். அவருக்கு இணையாக புதிதாக உருவாக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பில் ஸ்ரீபதி நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல தமிழகத்தில் காங்கிரஸுக்கு அடுத்த எதிரி திமுகதான் என்று சமீபத்தில் இடதுசாரிகள் தெரிவித்திருந்தனர். இதனால் கோபம் கொண்டு வரதராஜனைத்தான் முதல்வர் தனது கவிதையில் மறைமுகமாக சாடியிருப்பாரோ என்றும் அசை போடப்படுகிறது.
மொத்தத்தில் முதல்வரின் கவிதை அத்தனை பேரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டு விட்டது என்பது மட்டும் நிச்சயம். முதல்வரே முன்வந்து விளக்கினால்தான் உண்டு.












Click it and Unblock the Notifications