ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் விற்பனை இல்லை-காலை 6 முதல் இரவு 10 வரை மட்டுமே விற்பனை

மற்ற தினங்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விற்கப்படும். இந்த நடைமுறை செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுமென்றே செய்து வரும் அட்டூழியத்தால் டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பல பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுவிட்டன.
இதையடுத்து தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது.
இதில் டீசல் தட்டுப்பாடு குறித்தும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு முன் கூட்டியே பணம் செலுத்த வேண்டும் என்று போடப்பட்டுள்ள புதிய உத்தரவு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பங்க்குகளுக்கு டீசல் சப்ளை குறைக்கப்பட்டுள்ளதால் அடுத்த மாதம் 15ம் தேதி முதல் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகளை திறந்து வைப்பது என்று இதில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் பங்க்குகளை மூடிவிடுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல், டீசல் விற்பனை இருக்காது.
கூட்டத்துக்குப் பின் சங்கத்தின் தலைவர் கண்ணன் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழ்நாடு முழுவதும் 3,300 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. வருடந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மின்சார தட்டுப்பாடு காரணமாக டீசல் ஜெனரேட்டர்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இந்த காரணங்களால் டீசல் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துவிட்டது.
பெரு நகரங்களில் 40 சதவீதமும் நகர்புறங்களில் 20 சதவீதமும் கிராமப்புறங்களில் 10 சதவீதமும் தேவை உயர்ந்துவிட்டது.
மேலும் பெட்ரோல், டீசல் விற்பனையில் ஈடுபட்டு வந்த ரிலையன்ஸ் மற்றும் ஷெல் ஆகிய தனியார் நிறுவனங்கள் நஷ்டம் காரணமாக மூடப்பட்டுவிட்டன.
இதனால் தட்டுப்பாடு பூதாகரமாகிவிட்டது. அந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் இப்போது அரசு எண்ணெய் நிறுவனங்களின் டீலர்களையே நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். இதனாலும் தட்டுப்பாடு அதிகமாகிவிட்டது.
ஆனால் உயர்ந்துள்ள தேவைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் சப்ளையை அதிகரிக்க இந்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் மறுக்கின்றன. இதனால் பெட்ரோல், டீசலுக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இப்படி தட்டுப்பாடான சூழ்நிலையில் பெட்ரோல் பங்க்குகளை விடிய விடிய திறந்து வைத்துக் கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு இருப்பு இல்லை என்ற பதிலையே சொல்ல வேண்டியது உள்ளது.
இதனால் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு நஷ்டமும் வாடிக்கையாளர்களுடன் சண்டையும் தான் மிஞ்சுகிறது.
எனவே தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்க்குகளின் வேலை நேரத்தை குறைக்க சங்க பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம்.
தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
மேலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகளுக்கு விடுமுறை விடவும் முடிவு செய்துள்ளோம்.
இந்த முடிவு அடுத்த மாதம் (செப்டம்பர்) 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.
தேசிய நெடுஞ்சாலை, 4 வழிச்சாலைகளில் இயங்கும் பெட்ரோல் பங்க்குகள், அவர்களின் வசதிக்கு ஏற்றார்போல இந்த முடிவை செயல்படுத்துவதில் சில நாட்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.
பணப் பிரச்சினை:
மேலும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வாங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கான தொகையை இதுவரை அன்றைய தேவை எவ்வளவோ அதற்குரிய கட்டணத்தை வங்கியில் டி.டி. எடுத்து வழங்கி வந்தோம்.
ஆனால், தற்போது இந்த முறையில் எண்ணெய் நிறுவனங்கள் மாறுதல்களை கொண்டு வந்துள்ளன.
அதன்படி, சில எண்ணெய் நிறுவனங்கள் 48 மணி நேரத்துக்கு முன்னதாக தொகையை வங்கியில் மின்னணு பண பரிமாற்ற முறையில் செலுத்த வேண்டும் என்று உத்தரவு போடுகின்றன.
வங்கி விடுமுறை நாள் வந்துவிட்டால் அவ்வளவு தான். பணத்தை செலுத்துவதற்குள் டீலர்கள் படாதபாடுபடுகின்றனர். பண்டிகை காலங்களில் தொடர்ச்சியாக விடுமுறை வந்துவிட்டால் எண்ணெய் நிறுவனங்களும் இயங்குவதில்லை. இதனாலும் பணம் செலுத்த முடியவில்லை.
அதே சமயம் பெட்ரோல் பங்க்குகளில் அதிகபட்சமாக வாங்கி இருப்பு வைக்க இயலாது. பெட்ரோல் பங்க்குகளில் 3 நாட்களுக்கு மேல் பெட்ரோல், டீசல் இருப்பு வைக்க டாங்க் வசதிகள் கிடையாது.
அதிலும் கூட சில எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலுக்கு பணம் செலுத்தி 3 நாட்கள் கழித்த பிறகுதான் சரக்கு லாரியையே அனுப்புகின்றன. இதனாலும் செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இதனை எண்ணெய் நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
இந்த பிரச்சனையை எல்லாம் கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு பணம் செலுத்துவதில் முன்பிருந்த நடைமுறையையே தட்டுப்பாடு தீரும் வரை கடைபிடிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
மேலும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு வாட் வரி நிர்ணயிக்கும்போது மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசம் ஏற்படுகிறது. அதை மாற்றி இந்தியா முழுவதும் ஒரே சீரான வரியாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.
தொடரும் தட்டுப்பாடு:
இதற்கிடையே சென்னை உள்பட தமிழகத்தில் பல பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நீடிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பல பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டுள்ளன.












Click it and Unblock the Notifications