ஜம்முவில் தீவிரவாதிகளுடன் கடும் சண்டை - 4 பிணைக் கைதிகள் மீட்பு

ஜம்மு அருகே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, ஜம்மு - அக்னூர் - பூன்ச் நெடுஞ்சாலையில், டோமானா - மிஷ்ரிவாலா என்ற இடத்தில் இந்திய ராணுவத்தின் சோதனைச் சாவடி உள்ளது. நேற்று காலை ஒரு சரக்கு வாகனத்தில் அங்கு வந்த 3 தீவிரவாதிகள், சோதனைச் சாவடியில் இருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு விரைந்தனர். மேலும் ராணுவத்தினர் மீதும் சரமாரியாக சுட்டனர். இதில், பொதுமக்கள் தரப்பில் 2 பேரும், ஹவில்தார் விஜய்குமார், சுபேதார் பார்கசன் ஆகியோர் உயிரிழந்தனர்.
பின்னர் தப்பியோடிய தீவிரவாதிகள், சினூர் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து கொண்டனர். அங்கிருந்த 6 பேரை சிறை பிடித்தனர். இவர்களில் 3 பேர் குழந்தைகள், 3 பேர் பெண்கள் ஆவர்.
இதையடுத்து அந்தப் பகுதியை ராணுவம் முற்றுகையிட்டது. அவர்களுக்கும், தீவரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. காலை 7 மணிக்கு ஆரம்பித்த இந்த துப்பாக்கிச் சண்டை நேற்று நள்ளிரவு வரையில் நீடித்தது.
ராணுவத்தினரின் கடும் முயற்சிக்குப் பின்னர் 3 தீவிரவாதிகளும் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் இரண்டு பெண்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று விட்டனர். மற்ற நால்வரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சினூர் பகுதியை பெரும் பரபரப்பில் ஆழ்த்திய இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அதிக அளவிலான பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications