லஞ்சம்: இன்ஸ்பெக்டர், விஏஒ கைது
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில், வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.5,000 லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். அதேபோல நிவாரண தொகை வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய விஏஒ கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம் தாழக்குடி மீனவமங்களத்தை சேர்ந்தவர் சொரிமுத்து. ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் சிலருக்கும் கோவில் சொத்து
தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
இதில் சொரிமுத்து குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாகன வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து சொரிமுத்துவை போலீஸார் கைது செய்ய சென்றனர்.
அப்போது, ரூ.5,000 லஞ்சம் கொடுத்தால் இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக சொரிமுத்து குடும்பத்தினரிடம் ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் சவுந்திரபாண்டியன் கூறியுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழி்ப்பு போலீஸில் சொரிமுத்து புகார் செய்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்ஸ்பெக்டர் சவுந்திர பாண்டியனை கண்காணித்தனர். அவர்கள் கொடுத்த ஆலோசனையின்படி ரூ.5,000த்தை சவுந்திர பாண்டியனிடம் சொரிமுத்து கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஓழிப்பு போலீசார் சவுந்திரபாண்டியனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விஏஒ கைது...
அதேபோல கடலூர் மாவட்டத்தில் லஞ்சம் கேட்ட விஏஒவும் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அடுத்த மாளிகம்பட்டு விஏஒ சந்திரசேகரன். அதே ஊரைச் சேர்ந்த விவசாயி தெய்வநாயகம் சமீபத்தில் அண்மையில் விபத்தில் இறந்தார்.
உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் நிவாரண தொகை ரூ.1 லட்சம், ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.2,500 கேட்டு அவரது மனைவி ஞானம்மாள் பண்ரூட்டி தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். நீண்ட நாட்களாகியும் நிவாரணம் கிடைக்கவில்லை. விசாரித்தபோது, இதுதொடர்பான கோப்புகள் மாளிகம்பட்டு விஏஒவிடம் இருப்பதாக தெரிந்தது.
ஞானம்மாள் அவரது உறவினர் கிருஷ்ணமூர்த்தியுடன் கடந்த 30ம் தேதி விஏஒ சந்திரசேகரனை சந்தித்து பேசினார். அப்போது அவர் ரூ.3,000 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் கிருஷ்ணமூர்த்தி புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகரனிடம் ரூ.3,000 பணத்தை கொடுத்தார். அதை சந்திரசேகரன் வாங்கியபோது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பிடித்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications