இன்று மீண்டும் கூடுகிறது என்.எஸ்.ஜி.-'யு.எஸ். கடிதம்' உதவுமா?

இந்தியா தாக்கல் செய்துள்ள திருத்த வரைவறிக்கை குறித்து பல நாடுகள் திருப்தியின்மையை வெளியிட்டுள்ளதாலும், இந்த வரைவறிக்கையை நிராகரிக்க வேண்டும் என ஆயுதக் கட்டுப்பாட்டுக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளதாலும், இந்த கூட்டமும் முடிவேதும் எடுக்காமலேயே முடியும் என பொதுவான கருத்து நிலவுகிறது.
ஆனால் இந்தியாவுக்கு சாதகமாக தற்போது எழுந்துள்ள ஒரு முக்கிய அம்சம், அமெரிக்க அரசு, அந்த நாட்டு நாடாளுமன்றத்திற்கு எழுதியுள்ள கடிதம்தான். நேற்று வெளியிடப்பட்ட அந்தக் கடிதத்தில், இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்தினால், உடனடியாக ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும். இந்தியாவுக்கு முக்கியமான அணு தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்கா செய்யாது என்று கூறப்பட்டுள்ளது.
இது இந்தியாவுக்கு எதிரானது தான் என்றாலும், என்எஸ்ஜி கூட்டத்தில் தப்பிக்க இந்தியாவுக்கு இந்தக் கடிதம் உதவக் கூடும்.
இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்த விடாமல் அமெரிக்கா கட்டுப்படுத்தும் என்றரீதியில் இந்தக் கடிதம் உள்ளதால், இது அணு ஆயுத பரவலை எதிர்க்கும் நாடுகளை திருப்திப்படுத்தும் எனத் தெரிகிறது.
இதற்காகத்தான் இந்தக் கடிதத்தையே அமெரிக்கா தரப்பு நேற்று மாலை வெளியிட்டதோ என்ற கருத்தும் நிலவுகிறது.
இருப்பினும் என்.எஸ்.ஜியில் இந்தியாவின் திருத்த வரைவறிக்கைக்கு நிலவும் அதிருப்தி, ஆயுதக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் எதிர்ப்பு ஆகியவை இந்தியாவுக்கு கவலை தரும் விஷயங்களாகவே உள்ளன.
இன்றும், நாளையும் நடைபெறவுள்ள கூட்டத்தில், இந்தியாவுக்கு சாதகமான முடிவு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications