நிர்வாகத்தில் குறுக்கீடும் அமைச்சர்கள்-ஊழியர் சங்கம்
சிவகங்கை: அரசு ஊழியர்களை செயல்படவிடாமல், மாவட்ட நிர்வாகம் போல அமைச்சர்கள் செயல்படுகிறார்கள் என அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ராஜ்குமார் தெரிவித்தார்.
அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சிவகங்கையில் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் அதன் தலைவர் க.ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் 6வது ஊதியக்குழு அறிவிப்பில் உள்ள முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும். இது குறித்து தமிழக அரசிடம் சுட்டிக்காட்ட உள்ளோம். அரசு ஊழியர் சங்க மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி, அரசு ஊழியர் சங்கம் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என அறிவித்ததை செயல்படுத்தவில்லை. இதே போன்று பல்வேறு அரசு உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை.
அரசு ஊழியர்களை செயல்படவிடாமல், மாவட்ட நிர்வாகமாக அமைச்சர்களே செயல்படுகிறார்கள். இது வேதனை தரும் விஷயம். ஒவ்வொரு துறையிலும் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளன. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும்.
தமிழகம் முழுவதும் இளநிலை உதவியாளர்கள் 12,000 பேர் தேவைப்படுகின்றனர். எந்த அரசு அலுவலகங்களிலும் இரவுக் காவலர் கிடையாது. கம்ப்யூட்டர் இருந்தும் அதற்கு ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.
கருவூலத்துறையில் கடந்த 12 வருடமாக புதிய நியமனமே கிடையாது. இதே போன்று பல துறைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனை வலியுறுத்தி வரும் 19ல் அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications