அக். 2 முதல் ஏழைகளுக்காக புதிய திட்டம் அமல்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 1ம் தேதி முதல் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒரு புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவிக்க இருப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

உளியின் ஓசை திரைப்படத்தின் மூலம் தமக்கு கிடைத்த ரூ.25 லட்சத்தில் வரி போக மீதமுள்ள 18 லட்சம் ரூபாயை திரைப்படத் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு வழங்குவதாக முதல்வர் கருணாநிதி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை நிதி வழங்கும் விழா நடைபெற்றது.

திரைத்துறையில் உள்ள 24 சங்கங்களில் இடம் பெற்றுள்ள எழுத்தாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள், டெக்னீஷியன்கள், எடிட்டர்கள் உள்ளிட்ட 90 பேருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் தயாரிப்பாளர் சங்கத்தின் மூலமாக இந்தத் தொகை பிரித்தளிக்கப்பட்டது.

முதலமைச்சர் கருணாநிதி இந்த விழாவில் பங்கேற்று நிதியை வழங்கினார். இயக்குனர் அன்னக்கிளி மோகன், எழுத்தாளர்கள் வலம்புரி சோமநாதன், பாலமுருகன், நடிகை எஸ்.என்.லட்சுமி உள்ளிட்டோர் நிதியைப் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், இங்கே பழம்பெரும் இயக்குனர்கள், நடிகர்கள், உள்ளிட்ட திரைத்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய பலர் இந்த நிதியைப் பெற்ற போது என்னுடைய நினைவுகள் உருக்கத்துடன் பின்னோக்கிச் சுழன்றது.

பல ஆண்டுகளுக்கு முன்பு நான் கண்ட, பழகிய, தோழமையுடன் உறவு கொண்டிருந்த சிலரும் இந்த நிதி பெற்றவர்களில் இருந்தார்கள். இவர்களின் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று நான் மிகவும் வருத்தப்பட்டேன்.

திரைத்துறையில் வளமான நல்ல நிலையில் இருந்தபோது அவர்கள் சம்பாதித்த பணத்தோடு இந்த நிதியை ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்.

கலைத்துறைக்கு தங்களை முழுமையாக ஒப்படைத்து இந்தத் துறை வளம் பெறுவதற்கு துணை நின்றவர்கள் எல்லாம் இன்று இந்த நிலையில் இருக்கிறார்களே என்பதை எண்ணி மிகுந்த சோகத்திற்கும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளானேன். என்னுடைய கவலைகளை அவர்களும் உணராமல் இருக்க முடியாது. இதைப் பெற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி.

அன்பால் வழங்கிய நிதி:

இப்போது வழங்கிய நிதி கருணையினால் அல்ல. அன்பால் வழங்கியது. கருணை என்பது வேறு, அன்பு என்பது வேறு. கருணை என்றால் ஒருவர் மீது மற்றவர் காட்டுவது. அன்பு என்பது ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வது. திரைத்துறை மீதான என் அன்பை எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் காட்டிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் என்பது என் கற்பனையில் உதித்தது அல்ல. அண்ணா ஆட்சி அமைத்தபோது ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்க வேண்டும் என நினைத்து அது நிறைவேற முடியாததால் இதுதான் சரியான நேரம் என்று இப்போது தொடங்குகிறோம்.

அண்ணா மட்டுமல்ல. காமராஜர், காந்தி உட்பட இந்திய விடுதலைக்காக மக்களுக்கு பாடுபட்ட தலைவர்களை எல்லாம் போற்றுகிறோம். பெருமைப்படுத்துகிறோம்.

தென்னாட்டு காந்தி என்று அண்ணாவை சொல்லுவர்கள். அண்ணா பிறந்த நாளில் புதிய திட்டம் செயல்படுத்துவது போல உத்தமர் காந்தி பிறந்த நாளிலும் ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்த ஆசைப்படுகிறேன். அதற்கான திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.

காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் ஒரு புதிய திட்டம் ஒன்றை அறிவிக்க இருக்கிறோம். இப்போது அந்த திட்டத்தை அறிவிக்க முடியாது. என்ன திட்டம் என்பதை வெளியிட முடியாது.

இப்போது நிதி வழங்கியது போல ஏற்கெனவே மண்ணின் மைந்தன், கண்ணம்மா படங்களின் மூலம் கிடைத்த நிதியையும் புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியிருக்கிறேன். அது உங்களுக்கும் தெரியும் என்றார் கருணாநிதி.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் வரவேற்றுப் பேசினார். தயாரிப்பாளர்கள் ஏவிஎம் சரவணன், கோவைத்தம்பி, இயக்குனர் பாரதிராஜா, நடிகை குஷ்பு ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

நிகழ்ச்சியை இயக்குனர் வி.சி.குகநாதன் தொகுத்து வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+