கர்நாடகத்தில் பஜ்ரங் தள் வெறியாட்டம்-சர்ச்கள் மீது தாக்குதல்
பெங்களூர்: கர்நாடகத்தில் ஒரே நேரத்தில் 11 தேவாலயங்கள் மீது பஜ்ரங் தள் மற்றும் இந்து அமைப்புகள் தாக்குதல் நடத்தின. இதில் கன்னியஸ்திரி உள்பட பலர் காயமடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மங்களூர் மாவட்டத்தில் உள்ள மூடபிதிரே, கோளூர், பெல்தங்கடி, கொடிக்கல்லு உள்பட 6 இடங்களிலும், சிக்மகளூர் மாவட்டத்தில் ஜெயபுரா, மாகோடு ஆகிய இரு இடங்கள் மற்றும் கார்காளா உடுப்பி மாவட்டத்தில் இரண்டு மற்றும் கார்காளா என 11 இடங்களில் உள்ள தேவாலங்கள் மீது பஜ்ரங்தள் மற்றும் இந்து அமைப்பினர் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர்.
மேலோ கிறைஸ்ட் சர்ச், நியூ லைப் மையம் ஆகிய தேவாலயங்கள் இந்த தாக்குதலில் நாசமடைந்துள்ளன. தேவாலயத்தின் உள் பகுதியில் உள்ள ஜெப மேடையை அடித்து நொறுக்கப்பட்டன.
தாக்குதலை தடுக்க முயன்ற கன்னியஸ்திரி, காவலாளி உள்பட 4 பேர் தாக்கப்பட்டனர். படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மங்களூர், உள்ளால், கார்காளா, சிக்மகளூர், உடுப்பி ஆகிய பகுதிகளில் உள்ள இந்து கோவில்கள் முன் கூடிய கிறிஸ்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தேவாலயங்கள் தாக்கப்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கிறிஸ்தவ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மங்களூர் அம்மன் கட்டா, தொக்கட்டு, கொள்ளூர் ஆகிய பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. போலீஸார் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். அசம்பாவிதங்களை தடுக்க அங்கும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications