உள்ளாட்சி இடைத் தேர்தல் முடிந்தது - சென்னை, மதுரையில் மோதல்
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 283 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. சென்னையில் திமுக, அதிமுகவினர் இடையேயும், மதுரையில், திமுக,அதிமுக, சிபிஎம் தொண்டர்களிடையே மோதல் மூண்டது.
சென்னை மாநகராட்சியின் 18 மற்றும் 44 ஆகிய வார்டுகள் உள்பட தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 283 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி இம்மாதம் 4ம் தேதி முடிந்தது.
ஊராட்சித் துறையில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 2, வட்டார ஊராட்சி வார்டு உறுப்பினர் 13, ஊராட்சி தலைவர் பதவி 40, ஊராட்சி வார்டு உறுப்பினர் 571 உள்பட 626 காலி இடங்கள் உள்ளன.
இவற்றில் போட்டியிட 1597 பேர் மனு தாக்கல் செய்தனர். 53 மனுக்குள் தள்ளுபடி செய்யப்பட்டன. 502 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.
இந்த காலியிடங்களுக்கு 312 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 73 இடங்களுக்கு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இறுதியாக 241 இடங்களுக்கு இன்று தேர்தல் நடந்தது.
நகர்ப்புற பகுதிகளில் மதுரை மாநகராட்சியில் ஒரு வார்டு உறுப்பினர், சென்னை மாநகராட்சியில் 2 வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர் 6, மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் 7, பேரூராட்சி உறுப்பினர் 37 உள்பட 53 இடங்களுக்கு 225 பேர் மனு தாக்கல் செய்தனர். தள்ளபடி 18, வாபஸ் பெற்றது 62 மனுக்கள் போக 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
8 இடங்களுக்கு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இறுதியாக 42 இடங்களுக்கு இன்று தேர்தல் நடந்தது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி தொடங்கியது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. தேர்தல் நடக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேர்தல் தொடர்பான புகார்களை மாநில தேர்தல் ஆணையத்தில் போன் 24810500 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். சென்னை மாநகராட்சி தொடர்பான புகார் 25383614 என்ற எண்ணிலும், மதுரை மாநகராட்சி தொடர்பான புகார் 9443739522 என்ற எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் ..
சென்னையைப் பொறுத்தவரை இரு வார்டுகளிலும் திமுக - அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவியது. இரு கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தேர்தல் அமைதியாக நடந்து முடியத் தேவையான பாதுகாப்பு வசதிகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது.
வாக்குசாவடிக்குள் சந்தேகப் படும்படியான யாரையும் அனுமதிக்க கூடாது. அந்த பகுதி போலீஸ் தவிர, அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட வேண்டும். ரோந்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட வேண்டும். 5 அடுக்கு பாதுகாப்பு, வாக்காளர்களுக்கு அளிக்க வேண்டும் என்று போலீசாரை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டிருந்தது.
ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. வாக்குச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால், பெரிய அளவில் வன்முறை ஏற்படவில்லை.
வால்டாக்ஸ் சாலையில் மோதல்:
சென்னை மாநகராட்சியின் 44வது வார்டில் உள்ள வால்டாக்ஸ் சாலை வாக்குச் சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக கூறி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கள்ள ஓட்டுப் போடும் திமுகவினரை வெளியேற்றக் கோரி அதிமுக ஏஜென்ட்டும் வக்கீலுமான ராஜலட்சுமி தலைமையில் அதிமுகவினர் வாக்குச் சாவடிக்குள் செல்ல முயன்றனர்.அவர்களை திமுகவினர் தடுத்தனர். இதனால் அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து இருகட்சியினரும் சரமாரியாக அடித்துக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பெண் போலீஸார் ராஜலட்சுமியை அங்கிருந்து கஷ்டப்பட்டு அப்புறப்படுத்தினர்.
இதேபோல 18வது வார்டில் ஒரு வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டுப் போட முயன்றவர்களைப் படம் பிடிக்க முயன்ற செய்தியாளர்களையும், டிவி கேமராமேன்களையும், ஒரு கும்பல் ஏக வசனத்தில் விமர்சித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பத்திரிக்கையாளர்களை மிரட்டியவர்களை போலீஸார் தடுக்கவோ, விலக்கி விடவோ முயற்சிக்கவில்லை.
மதுரையில் மண்டை உடைப்பு
மதுரை 52வது வார்டுக்கு நடந்த வாக்குப்பதிவின்போது திமுகவினருக்கும், அதிமுக மற்றும் சிபிஎம் கட்சியினருக்கிடைேய மோதல் மூண்டது.
கள்ள ஓட்டுப் போட திமுகவினர் முயற்சிப்பதாக கூறி அதிமுகவினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் குற்றம் சாட்டினர். இதற்குதிமுகவினர்மறுப்புெதரிவித்து மோதலில் குவித்தனர்.
இரு தரப்பினரும் சரமாரியாக அடித்துக் கொண்டதில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து அங்கு வந்த தேர்தல் பார்வையாளர் கோபாலை முற்றுகையிட்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் தெப்பக்குளம் சென்ற கம்யூனிஸ்ட் கட்சியினரும், அதிமுகவினரும் அங்கு வந்த மாநகரகாவல்துறை ஆணையரின் காரை மறித்துப் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
20ம் தேதி ஒட்டு எண்ணிக்கை
ஓட்டு எண்ணிக்கை 20ம் தேதி காலை 8 மணிக்கு நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications