விஜயகாந்த் முன்ஜாமீன் மனு சில மணி நேரங்களில் வாபஸ்

நடிகர் வடிவேலுவின் சாலிகிராமம் வீடு மற்றும் அலுவலகம் ஓரிரு தினங்களுக்கு முன்பு கடும் தாக்குதலுக்கு ஆளானது. 50க்கும் மேற்பட்டோர் ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் வந்து சரமாரியாக தாக்குதல் நடத்தி விட்டுப் போய் விட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு விஜயகாந்த்தான் காரணம் என விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வடிவேலு புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து விஜயகாந்த் உள்ளிட்ட 30 பேர் மீது போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், விஜயகாந்த் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக அவரது சார்பில் வக்கீல் மகேந்திரன் மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், என் மீது 122பி, 147, 148, 323, 336, 427, 448, 506 (2), 307 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. வடிவேலு என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்துள்ளது.
எனது தூண்டுதலின் பேரில் 30 பேர் மோட்டார் சைக்கிள்களில் சென்று வடிவேலு வீட்டின் கற்களை வீசியதாகவும், அத்துமீறி நுழைந்து வீட்டில் நின்ற வாகனத்தை சேதப்படுத்தியதாகவும், அலுவலகத்தை தாக்கியதாகவும், மொத்தம் ரூ. 1 லட்சத்துக்கு சேதத்தை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
நான் தேமுதிக தலைவராக இருந்து வருகிறேன். சமுதாயத்தில் நல்ல மதிப்புடையவனாக இருந்து வருகிறேன். எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மற்ற அரசியல் கட்சியினர் தூண்டுதலின் பேரில், எனக்கு எதிராக வடிவேலு பொய் புகார் கொடுத்துள்ளார்.
ஆகவே எனக்கு இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக கோர்ட் விதிக்கும் எந்த நிபந்தனையையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன் என்று கூறப்பட்டிருந்தது.
திடீர் வாபஸ்:
இந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே முன்ஜாமீன் மனு திரும்பப் பெறப்பட்டு விட்டது.
மனுவை விஜய்காந்த் தாக்கல் செய்யவில்லை என்றும், அவர் சார்பில் வழக்கறிஞர் எஸ். மகேந்திரன் என்பவர் தானாக விரும்பி தாக்கல் செய்ததாகவும் விஜய்காந்த் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த வழக்கறிஞர் கூறுகையில், முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு விஜய்காந்த் என்னிடம் எதுவும் கூறவில்லை. ஆனால் அவர் சார்பில் நானாகத்தான் விரும்பி முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தேன். ஆனால் தேமுதிக தலைவர் என்னைக் கூப்பிட்டு, மனுவை வாபஸ் பெறச் சொல்லிவிட்டார். எனவே மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டேன் என மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆனால், தன்னைக் கைது செய்தால் தனக்கு அதிக பாப்புலாரிட்டி கிடைக்கும் என்பதால் தான் விஜய்காந்த் தரப்பு முன் ஜாமீனை வாபஸ் பெற்றதாக வடிவேலு தரப்பினர் கூறுகின்றனர்.
தனக்கு முன்ஜாமீன் தேவையில்லை என்று விஜயகாந்த் கூறியதைத் தொடர்ந்து வக்கீல் மகேந்திரன், இன்று காலை உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் முன்ஜாமீன் மனுவை முறைப்படி திரும்பப் பெற்றுக் கொண்டார்.
வடிவேலுக்கு கமாண்டோ பாதுகாப்பு!:
இதற்கிடையே நடிகர் வடிவேலுவின் கோரிக்கையை ஏற்று அவரது வீட்டுக்கு கமாண்டோ படை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை வீரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அடுத்த தெருவில் உள்ள விஜயகாந்த் வீட்டின் முன்பு தேமுதிகவினர் கூடியபடி உள்ளனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications