நளினி 'விடுதலை': சட்டப்படி நடவடிக்கை-கருணாநிதி
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரின் விடுதலை கோரும் மனுக்களை பரிசீலித்து, பரிந்துரையை அளிக்குமாறு சிறை ஆலோசனைக் குழுவை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் நளினி, பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும். 3 பேரின் கோரிக்கையையும் தமிழக அரசு புதிய சிறை ஆலோசனைக் குழுவை அமைத்து மீண்டும் பரிசீலிக்குமாறு தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் கருணாநிதி அளித்துள்ள பதிலில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க சிறைச்சாலை ஆலோசனைக் குழு மீண்டும் கூடி 3 பேரின் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து அரசுக்குப் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையிலும், சட்டம் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையிலும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
சிறை விதிமுறைப்படி, மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சித் தலைவர், சிறை கண்காணிப்பாளர், தலைமை நீதித்துறை நடுவர், மண்டல நடத்தை அதிகாரி மற்றும் இரு அரசு சாரா உறுப்பினர்களைக் கொண்ட சிறைச்சாலை ஆலோசனைக் குழு கூடி, நளினி உள்ளிட் 3 பேரின் மனுக்களையும் ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை அனுப்பி வைக்கும்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கேற்ப சிறைச்சாலை ஆலோசனைக் குழு கூடும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications