அமைச்சர் பெயரில் தில்லுமுல்லு-பாதுகாப்பு போலீசார் கூண்டோடு மாற்றம்!
திருச்சி: தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என். நேருவின் பெயரில் தில்லு முல்லு செய்த பாதுகாப்புப் பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாண்டியன், வினோத் ஆகியோர் மீது கட்டப் பஞ்சாயத்து பிரச்சனை வெடித்தது.
இதையடுத்து மத்திய, மாநில, அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் குறித்து மாநில உளவுத்துறை போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், அமைச்சர் நேருவின் பெயரைச் சொல்லி அவரது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார் சிபாரிசு, முறைகேடுகள், கட்டப் பஞ்சாயத்து என தூள் கிளப்பி வந்தது தெரியவந்தது.
நேரு திருச்சி வரும் போது பாதுகாப்பு பணிக்காக திருச்சி மாநகர ஆயுதப்படையை சேர்ந்த எஸ்.ஐ. மனோகர் தலைமையில் புகழேந்தி, முரளி, முருகன் ஆகியோர் பாதுகாப்பிற்கு செல்வது வழக்கம்.
கடந்த சில வருடங்களாகவே இவர்கள் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் அமைச்சர் பெயரைச் சொல்லி முறைகேடுகள், கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணம் பார்த்துள்ளனர்.
இந்த விவரங்களை உளவுப் பிரிவினர் நேருவின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து, போலீசாரை உடனே மாற்றுமாறு திருச்சி மாநகர போலீஸ் கமிஷினர் அலெக்சாண்டர் மோகனுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து எஸ்.ஐ. மனோகர், புகழேந்தி, முரளி, முருகன் ஆகியோர் உடனடியாக அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு பதிலாக ஆயுதப்படை எஸ்.ஐ. ஆரோக்கியராஜ் தலைமையில் பாஸ்கரன், ரவி, இஸ்மாயில் ஆகியோர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
