சிபிஐ உண்ணாவிரதம் - வராதது குறித்து பாமக விளக்கம்
சென்னை: மது ஒழிப்பு தொடர்பான வெள்ளைப் புடவை பேரணி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பாமகவால் கலந்து கொள்ள முடியவில்லை என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி விளக்கியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான ராணுவத் தாக்குதலைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில் திமுக, காங்கிரஸைத் தவிர பிற அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அதிமுக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். தா.பாண்டியனுக்கும் கடிதம் எழுதி ஆதரவைத் தெரிவித்திருந்தார்.
இந்த உண்ணாவிரதம் புதிய கூட்டணிக்கான அஸ்திவாரம் என கருதப்பட்டது. ஆனால் வழக்கம் போல கடைசி நேரத்தில் ஜெயலலிதா சொதப்பினார். அதிமுகவினர் யாரையும் உண்ணாவிரதத்திற்கு அவர் அனுப்பவில்லை. அதேபோல பாமகவும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை.
நேற்றைய உண்ணாவிரதப் போராட்டத்தில், தேமுதிகவினரே பெரும் திரளாக திரண்டிருந்ததால் அதிருப்தி அடைந்த அதிமுகவும், பாமகவும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தாங்கள் ஏன் வரவில்லை என்பது குறித்து ஜி.கே.மணி கூறுகையில், 2 நாட்களுக்கு முன்புதான் இலங்கை துணைத் தூதரகம் நோக்கி ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியை நடத்தினோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்த அதேநேரத்தில் பசுமைத் தாயகம் சார்பில் பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காந்தியடிகள் பிறந்த நாள், பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் ஆகியவற்றையொட்டி அவர்களின் சிலைகளுக்கும், நினைவிடத்திற்கும் சென்று அஞ்சலி செலுத்த வேண்டியிருந்தது.
மாலையில் மது ஒழிப்பை வலியுறுத்தி குடியால் கணவரை இழந்த பெண்களின் வெள்ளைப் புடவை பேரணி நடத்தப்பட்டது.
இப்படி ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால், பாமகவினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது. மற்றபடி, இதில் அரசியல் ரீதியிலான காரணங்கள் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.
அதிமுகவைத்தான் கேட்க வேண்டும் - தா.பாண்டியன்
அதிமுகவினர் உண்ணாவிரதத்திற்கு வராமல் போனது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தா.பாண்டியனிடம் கேட்டபோது, போராட்டத்தில் கலந்து கொள்வதாக கடிதம் கொடுத்திருந்தார்கள். ஏன் வரவில்லை என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications
