பொது இடங்களில் புகைபிடித்த 500 பேருக்கு அபராதம்
சென்னை: பொது இடங்களில் புகை பிடிக்க தடை சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் சென்னையில் புகை பிடித்த சுமார் 500 பேரை போலீஸார் பிடித்து அபராதம் விதித்தனர்.
நாடு முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கும் சட்டம் நேற்று முன்தினம் அமல்படுத்தப்பட்டது. பஸ், ரயில், விமான நிலையங்கள், மருத்துவமனை, ஹோட்டல், பிளாட்பாரம் உள்ளிட்ட பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது. மீறினால் ரூ 200 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொது இடங்களில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அபராத பயத்தின் காரணமாக பதுங்கி பதுங்கி 'தம்' அடித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பொது இடங்களில் 'தம்' அடிக்கும் பார்ட்டிகளை விரட்டி பிடித்து போலீஸார் எச்சரித்து வருகின்றனர். பெட்டிக்கடைகளிலும் எச்சரிக்கை பலகைகள் தொங்க விடப்பட்டுள்ளன. இதனால் வியாபாரம் மந்தமாகி விட்டதாக கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
புகை பிடிப்பவர்களை பிடித்து எச்சரிக்கை செய்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும் போலீஸாருக்கு கமிஷனர் சேகர் அறிவுறுத்தியுள்ளார். போலீஸாரின் உத்தரவின் பேரில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளில் எச்சரிக்கை பலகைகள் மாட்டப்பட்டுள்ளன. போலீஸ்காரர்களைப் பார்த்த பல தம் பார்ட்டிகள் சிகரெட்டை கீழே போட்டுவிட்டு நல்ல பிள்ளையாய் நகர்ந்தனர். சிலர் ஓட்டம் பிடித்தனர்.
சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சிகரெட், பீடிகள் விற்பனையானதாகவும், தடை உத்தரவுக்கு பிறகு ரூ.50 லட்சமாக இது குறைந்துவிட்டதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த தடை சட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு அபராத தொகை அதிகரிக்க வழி செய்யப்படும் என்று சுகாதாரத் துறை கூறியுள்ளது. தண்டனை மற்றும் அபராதம் குறித்த சட்ட குறிப்புகள் ஓரிரு நாளில் வெளியாகிவிடும் என்றும் பொது இடங்களில் புகைபிடிப்போர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் ஓரளவுக்கு கெடுபிடிகள் அதிகமாகவே உள்ளது. சென்னை புறநகர் பகுதியில் பொது இடங்களில் புகை பிடித்த 164 பேரை போலீஸார் பிடித்து எச்சரித்து அனுப்பினர். மாநிலம் முழுவதும் சுமார் 500 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து கமிஷனர் சேகர் கூறுகையில், புகைபிடிக்க தடை சட்டத்தை படிப்படியாகத்தான் அமல்படுத்த முடியும். புகைபிடிப்பவர்களை போலீஸார் பிடித்து எச்சரிப்பார்கள். அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.
எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் 10 நாட்கள் வரை நீடிக்கும். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும். பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்தால்தான் தடை சட்டத்தை முழுமையாக சிறப்பாக அமல்படுத்த முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications