கார்த்திக் கட்சிக் கொடி எரிப்பு - சாலை மறியல்
தேனி: நடிகர் கார்திக் கட்சி கொடி எரிக்கப்பட்டதால் அக்கட்சியினர், சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்யக் கோரி சாலை மறியல் செய்தனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது.
பார்வார்டு பிளாக் கட்சியின் மாநில தலைவராக இருந்த நடிகர் கார்த்திக்கும், கட்சி தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த கட்சியை விட்டு வெளியேறிய கார்த்திக், தனி கட்சி தொடங்கினார்.
நாடாளும் மக்கள் கட்சி என்று தனது கட்சிக்கு பெயரிட்டு, கட்சி கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். கார்த்திக்கின் கட்சி தென் மாவட்டங்களில் வளரத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டி விலக்கில் வைக்கப்பட்டிருந்த அவரது கட்சியின் கொடி கம்பத்தை மர்ம நபர்கள் சிலர் வெட்டி சாய்த்ததுடன், கொடியையும் தீ வைத்து எரித்துள்ளனர்.
தகவல் அறிந்த அக்கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்தில் குவிந்தனர்.
கொடிக் கம்பத்தை வெட்டி தீ வைத்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. சில மணி நேரம் போக்குவர்தது பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்து மறியலை கைவிட செய்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.