பாஜக எம்.பிக்கு சரமாரி அடி - போலீஸார் மீது கொலை முயற்சி வழக்கு
சாகர்: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. வீரேந்திர குமாரை, ரயில்வே போலீஸார் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய ரயில்வே போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 7 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ம.பி. மாநிலம் சாகர் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாஜகவைச் சேர்ந்த வீரேந்திர குமார். அங்குள்ள பினா ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள சோட்டி பஜாரியா பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரயில்வே நிலத்தை மீட்கும் பணியில் நேற்று ரயில்வே போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த வீரேந்திரகுமாரும், பாஜகவினரும் அதைத் தடுக்க முயன்றனர்.
இதையடுத்து ரயில்வே போலீஸார் எம்.பி. உள்ளிட்டோரை சரமாரியாக லத்திகளால் தாக்கினர். இதில் வீரேந்திர குமார் படுகாயமடைந்தார். அவரது தலை மற்றும் கையிலிருந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து உடனடியாக அவரை போபால் ஹமீதியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவத்தால் கொதிப்படைந்த சாகர் பாஜகவினர் அங்கு பந்த் நடத்த அழைப்பு விடுத்தனர். இதையடுத்து சாகர் நகரில் கடைகள் அடைக்கப்பட்டன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரயில்வே இன்ஸ்பெக்டர் விவேக் சர்மா, உதவி சப் இன்ஸ்பெக்டர் சர்மா, ஜவான்கள் சுதீர், கோகுல், கர்தார் சிங் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பீனா ரயில் நிலைய ரயில்வே போலீஸ் அதிகாரி பத்குர்ஜார், கமாண்டன்ட் சரிகா மோகன், இன்ஸ்பெக்டர் விவேக் சர்மா மற்றும் நான்கு போலீஸார் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.