தமிழ் அழிந்த பிறகுதான் சமரசம் வருமா? - கருணாநிதி உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈழத் தமிழர்களின் ரத்த அபிஷேகத்தில்தான் தீர்வு கிடைக்குமா? என உருக்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

சென்னை மயிலை மாங்கொல்லையில் நடந்த தி.மு.க. பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

இலங்கையில் இருந்து தனி ஈழம் பிரிந்துதான் தீர வேண்டுமா? இது நீண்ட நாளாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயம்.

இதற்கிடையில் எத்தனையோ சமாதான குழுக்கள் வந்துள்ளன. நார்வே உள்ளிட்ட பல நாடுகள், அறிவாளிகள், சமரச தூதுவர்கள், சமரசம் செய்ய வந்த நாடுகள் என அத்தனை பேரும் முயன்றும் கூட அங்கே இன்னும் சமரசம் ஏற்படவில்லை.

வேதனை!

ஒருவேளை, தமிழனின் ரத்தம் முழுவதும் இலங்கை தீவிலே அபிஷேகிக்கப்பட்டால்தான் அதற்கு பிறகுதான் சமரசம் வரும் என்ற செடி இலங்கையிலே முளைக்குமோ என்னவோ, எனக்கு தெரியவில்லை! (குரல் தழுதழுக்க உணர்ச்சி வசப்பட்டு சில நொடிகள் பேச்சை நிறுத்தினார் முதல்வர்)

அத்தகைய ரத்த அபிஷேகம் நடைபெறாமலேயே அங்கே புரட்சிப்பூ, புதுமைப்பூ, ஜனநாயகப்பூ, விடுதலைப்பூ, மறுமலர்ச்சிப்பூ, உரிமைப்பூ தமிழர்களின் வாழ்வுப்பூ அங்கே பூக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. திமுகவின் உணர்வும் ஆசையும் கருத்தும் அதுதான்.

அந்தக் கருத்தை வெற்றி பெறச் செய்ய இந்தியாவிலே இருக்கின்ற தலைவர்கள், தமிழகத்திலே இருக்கின்ற தலைவர்கள் எல்லாம் முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் இந்தப் பொதுக்கூட்டம் மற்றும் வேண்டுகோள்.

ஒன்றுபடுவோம்!

இந்த ஒரு விஷயத்திலாவது, ஈழத்தில் செத்துக் கொண்டிருக்கிற ஈழத் தமிழனை காப்பாற்றுகின்ற விஷயத்திலாவது, நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இருப்போம். நமக்குள்ளே சச்சரவுகள் தேவையில்லை.

ஒன்றுபட்ட நிலையிலே இந்த பிரச்சினையை அணுகுவோம். எந்த கசப்புகளும், எந்த மன வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

உள்ளத்தால் ஒருவரே, வெள்ளம் போல் தமிழர் கூட்டம்... என்ற புரட்சி கவிஞர் பாரதிதாசனின் கவி வரிகளை நிறைவேறும் நாளை நான் எதிர்பார்க்கிறேன். அந்த நாள் உருவாக வேண்டும் என்றுதான் நான் தவம் இருக்கிறேன். அந்த தவம் பலிக்க வேண்டும். அது இதுவரையிலும் பலிக்காவிட்டாலும் கூட, ஈழத் தமிழர் பிரச்சினையிலாவது அந்த தவம் பலித்து அனைவரும் தமிழர்கள்தான், தமிழர்களுக்கு ஒரு தீங்கு வந்தால் எல்லாரும் கேடயங்களாக இருந்து அந்த தீங்கை தாக்குவோம். அந்த பகையை வெல்லுவோம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரே உணர்வு...

இன்றைக்கு உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் ஒரே உணர்வோடு இந்த பிரச்சினையை நோக்குகிறார்கள் என்ற நினைப்பு மன ஆறுதல் தருகிறது. நேற்று நான் அந்த செய்தியை வெளியிட்டவுடன் இங்கிலாந்து நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் வீரேந்திர சர்மான், இந்த செய்தியை இன்டர்நெட், பத்திரிகைச் செய்தியைப் பார்த்து விட்டு எனக்கு கடிதம் எழுதியுள்ளார். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் எனக்கு கடிதம் எழுதியுள்ளது. இலங்கை எம்.பி, சேனாதிராஜா என்ற எம்.பி.யும் கடிதம் எழுதியுள்ளார். (அந்த கடிதங்களையெல்லாம் மேடையில் படித்துக் காட்டினார்).

வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ் சமுதாயத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதி என்னை துணைக்கு நில்லுங்கள் என்று கேட்கிறார்கள் என்றால், அது எனக்கு மட்டும் விடுக்கப்பட்ட வேண்டுகோள் அல்ல.

தமிழ் சமுதாயத்தை தமிழர்களை தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களை தமிழர்களுக்காக இயக்கம் நடத்துகின்ற அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளதாகவே அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இங்குள்ள தமிழர்களும் சாவோம்!

தனி ஒருவனாக நின்று இந்த காரியத்தைச் சாதிக்க முடியும் என்று நான் சொன்னால் என்னை விட இறுமாப்பு உள்ளவன் யாரும் இருக்கமுடியாது. ஆகவே தமிழர்கள் அனைவரும் ஒரே உருவில், உணர்வில் நின்று இந்த ஆபத்துக்கு விடை காண்போம்.

இந்திய அரசு இதற்கு ஒத்துழைக்கும் என்று நம்புவோம். நம்பினால்தான் நாம் வெற்றி பெறுவோம். அவர்கள் ஒத்துழைத்தால் நமக்கும் வாழ்வு உண்டு. ஒத்துழைக்கா விட்டால் இலங்கைத் தமிழர்கள் மாத்திரமல்ல, இங்குள்ள தமிழர்களும் அடியோடு சாவோம். இதைத்தவிர வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை.

இந்த கூட்டத்தோடு இந்த போராட்டம் முடிவதல்ல, நமது குரல் இதோடு நிற்பதல்ல, வேறு வழிகளையும் யோசிப்போம். பொதுக்குழுவில் இது பற்றி யோசித்து முடிவு எடுப்போம். அதற்கு வழியில்லாமல் இளகிய மனம் படைத்த பிரதமரும், அதைவிட இளகிய மனம் படைத்த சோனியா காந்தியும் தங்கள் கருணையை, அன்பை, பாசத்தை, மனிதநேயத்தை இலங்கை தமிழர்கள் மீதும் காட்டுவார்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன், என்றார் முதல்வர்.

உணர்ச்சி வசப்பட்ட முதல்வர்!

ஈழத் தமிழர்கள் படும் துயரங்கள் குறித்துப் பேசியபோதும், பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் வேண்டுகோள் விடுத்த போதும் முதல்வர் கருணாநிதியால் தனது உணர்வுகளைக் கட்டுபடுத்த முடியவில்லை. மிகவும் தழுதழுத்த குரலில் அவர் பேசியதைக் கேட்டு கூட்டத்தினர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டனர். சிலர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை வாழ்த்திக் கோஷமெழுப்ப, அவர்களை போலீசார் அமைதிப்படுத்தினர்.

கூட்டத்தில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, பரிதி இளம்வழுதி, முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன், கவிஞர் கனிமொழி எம்.பி., திருச்சி சிவா எம்.பி. ஆகியோரும் இக் கூட்டத்தில் பேசினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+