நீண்ட நாள் உளைச்சலில் தவித்த கார்த்திக் ராஜாராம்: போலீஸ் தகவல்
வாஷிங்டன்: லாஸ் ஏஞ்செலஸ் நகரில் தனது மனைவி, மூன்று மகன்கள் மற்றும் மாமியாரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தமிழரான கார்த்திக் ராஜாராம் நீண்ட நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாகவே அவர் இச்செயலை செய்திருக்கிறார் எனவும், திடீரென எடுத்த முடிவு இது அல்ல என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நிதி சீர்குலைவுக்கு முதல் பலியாக சென்னை ஐஐடியில் படித்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலஸ் நகரில் வசித்து வந்த கார்த்திக் ராஜாராமின் குடும்பம் உயிரிழந்துள்ளது.
எம்.பி.ஏ படித்தவரான கார்த்திக் ராஜாராம் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். அங்கு ஏற்பட்ட நிதி சிக்கல் காரணமாக வேலை இழந்தார் கார்த்திக். பல மாதங்களாக அவருக்கு வேறு எங்கும் வேலை கிடைக்கவில்லை. அமெரிக்க பொருளாதார சந்தையில் ஏற்பட்ட தொடர் சரிவு காரணமாக பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார் கார்த்திக்.
குடும்பத்தையும் நடத்த முடியாமல், வேலையும் கிடைக்காத விரக்தியில் இருந்து வந்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி சுபஸ்ரீ (39), மாமியார் இந்திரா ராமசேஷன் (69), மகன்கள் கிருஷ்ணா ராஜாராம் (19), கணேஷ் (12), அர்ஜூனா (7) ஆகியோரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸார், தற்போது கார்த்திக் ராஜாராம் இந்த முடிவை திடீரென எடுக்கவில்லை. கடந்த சில மாதங்களாகவே அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். தற்கொலை முடிவிலும் அவர் இருந்திருக்கிறார் என்பது அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கடிதங்கள் மூலம் தெரிய வந்துள்ளது என்று போலீஸ் அதிகாரி மைக்கேல் மூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது திடீரென உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவாகத் தெரியவில்லை. சமீப காலமாகவே இந்த நோக்கத்தில்தான் அவர் இருந்திருக்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications