புலிகளை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது: கருணா

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதிகளில் ஒருவராக விளங்கியவர் கருணா. பின்னர் பிரபாகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை உருவாக்கினார். இடையில், அமைப்புக்குள் தலைவர் பொறுப்புக்கு போட்டி வலுக்கவே திருட்டு பாஸ்போர்ட்டில் லண்டன் தப்பிச் சென்று கைதானார்.
சமீபத்தில் இலங்கை திரும்பிய அவர் சில நாட்களுக்கு முன்பு ஆளுங்கட்சியின் சார்பில் எம்.பியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
தற்போது விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைப் படைகளுக்கும் இடையே நடந்து வரும் சண்டை குறித்து கருணா கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கு மிகப் பெரிய இழப்புகள், பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் மோசமான நிலையில் உள்ளனர்.
ஆனால் விரைவில் அவர்களை அழித்து விட முடியும், அவர்களது தளங்களைப் பிடித்து விட முடியும் என சிலர் கூறுவது சரியல்ல. அது சாத்தியமும் அல்ல. விடுதலைப் புலிகளை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. அவர்கள் எப்போது பதிலடி கொடுப்பார்கள், பொங்கி எழுவார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது.
விடுதலைப் புலிகளை வீழ்த்த காலக்கெடு எதுவும் விதிக்க முடியாது. போரில் அது சாத்தியமும் அல்ல. தற்போதைக்கு படைகள் முன்னேறி வருகின்றன. யாழ்ப்பாணத்திற்கான சாலையை ராணுவம் திறந்து விடுவதற்கு 80 சதவீத வாய்ப்புகள் உள்ளன.
நான் எம்.பி. பதவி வேண்டும் என்று யாரையும் கேட்கவில்லை. அரசேதான் எனக்கு இதைக் கொடுத்தது. தமிழ் மக்களின் குரலாக நான் நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் என்றார் கருணா.












Click it and Unblock the Notifications