சென்னை-விதி மீறிய 200 கட்டடங்களை இடிப்பு
சென்னை: சென்னையில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை சிஎம்டிஏவும், மாநகராட்சியும் இணைந்து இடிக்கும் பணியை தொடங்கியுள்ளன. 200 கட்டடங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக அரசு 2007 ஜூலை மாதம் ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்தது. விதிமுறை மீறி கட்டிய கட்டிடங்களை அடுத்த ஓராண்டு இடிக்க மாட்டோம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. அது மேலும் ஓராண்டு (இந்த ஆண்டு) நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்த உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் (சிஎம்டிஏ) சென்னை மாநகராட்சியும் சேர்ந்து விதிமுறை மீறிய கட்டிடங்களை இடிக்க தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் விக்ரம் கபூர் கூறியதாவது:
சென்னையில் இதுவரை 200 கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஜூலை 2007ம் ஆண்டுக்கு பிறகு கட்டியது அல்லது அதற்கு பிறகு ஒப்புதலுக்காக விண்ணப்பித்திருந்தது இதில் அடங்கும்.
விதிமுறை மீறி கட்டிய உங்கள் கட்டிடங்களை ஏன் இடிக்க கூடாது என்று விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படுகிறது. அவர்களுடைய விளக்கம் திருப்திகரமாக இல்லாததால் சென்னை மாநகராட்சியுடன் சேர்ந்து அக்கட்டிடங்களை இடிக்க தொடங்கியுள்ளோம்.
இதுவரை 5 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இது இன்று தொடங்கி நாளை முடியும் நடவடிக்கை அல்ல. புதிதாக கட்டிடம் கட்டுவோர் தங்களது கட்டட வரை படத்தில் கொடுக்கப்பட்டுள்ளதையே பின்பற்றி கட்ட வேண்டும். விதிமுறை மீறினால் கட்டடம் சட்டத்தின்படி இடிக்கப்படும் என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
சென்னை மாநகராட்சி இதுவரை 17 கட்டடங்கள் விதிமுறை மீறி கட்டியதாக கண்டறிந்துள்ளது. இதில் நேற்று வரை 5 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை சௌகார்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியாகும்.
இரண்டாவது கட்டமாக விதிமுறையைமீறிய கட்டடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வுக்குபின் அந்த கட்டடங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications