மன்னிப்பு கேட்டார் ஜெட் தலைவர்; அனைவருக்கும் மீண்டும் வேலை!!

அனாவசிய செலவுகளைக் குறைக்கவும் நஷ்டத்தை ஈடுகட்டவும் ஜெட்-கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிர்வாகங்கள் கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் சமீபத்தில் கையெழுத்திட்டன.
இதைத் தொடர்ந்து ஒரே நாளில் 1900 ஊழியர்களை தேவையற்றவர்கள் என்று கூறி பணிநீக்கம் செய்தது ஜெட் நிர்வாகம். மேலும் ஜெட்-கிங் பிஷர் நிர்வாகங்கள் கூட்டாக 6 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யவிருப்பதாகவும் அறிவித்தன.
இது நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தீபாவளி நேரம் பார்த்து இப்படிச் செய்திருப்பது மிகவும் கொடுமையான செயல் என மத்திய அமைச்சர் முரளி தியோரா கூறியிருந்தார். டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித், மகாராஷ்ட்ரா நவ நிர்மாண் தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோரும் இந்த பணி நீக்கங்களை மறு பரிசீலனை செய்யக் கோரி இருந்தனர்.
'மன்னித்து விடுங்கள்':
இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெட் நிர்வாகத் தலைவர் நரேஷ் கோயல்.
அவர் கூறியிருப்பதாவது:
ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்த பிறகு என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை. என் ஊழியர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வருவதை என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு எவ்வளவு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை, என் பணியாளர்களை இனி நான் இழக்கமாட்டேன்.
நண்பர்களே... அனைவரும் இன்று, வெள்ளிக்கிழமை காலை முதல் வழக்கம் போல் பணிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.
யாருடைய நெருக்குதலும் இல்லாமல், எனது மனசாட்சியின்படி நான் எடுத்துள்ள முடிவு இது.
நீங்கள் (பணியாளர்கள்) தனி நபர்கள் அல்ல. எனது குடும்பத்தின் ஒரு அங்கம். என் குடும்பத்தினர் வேதனையோடும், கண்ணீரோடும் நிற்பதை என்னால் பார்க்க முடியாது. எனவே தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். பணிக்குத் திரும்புங்கள்.
விமானங்கள் நஷ்டத்தில் இயங்குவதைத் தவிர்க்க மேற்கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கைகளில் ஒன்றுதான் பணியாளர் குறைப்பு. ஆனால் இனி அது தேவையில்லை. என் ஊழியர்கள் ஒருவரைக் கூட நான் கைவிட மாட்டேன். ஆனால் அதற்குப் பதில் நிர்வாகச் செலவுகள், தேவையற்ற விளம்பரங்களுக்கான செலவைக் குறைத்துக் கொள்கிறேன்.
அதே நேரம், எங்களைப் போன்ற நிறுவனங்களை இம்மாதிரி இக்காட்டான சூழலில் கைகொடுத்து உதவ அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் கோயல்.
இதன் மூலம் ஜெட் ஏர்வேஸில் ஒருவர் கூடப் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார் என்ற உறுதியை நரேஷ் கோயல் அளித்துள்ளார். ஆனால் ஓரளவு சம்பளக் குறைப்பு மட்டும் இருக்கும் எனத் தெரிகிறது. ஆனாலும் தீபாவளிப் பண்டிகை சமயத்தில் தங்கள் வாழ்வு இருண்டு போகுமோ என பயந்து கொண்டிருந்த ஊழியர்கள் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
இவரது கூட்டாளி விஜய் மல்லையா ஏற்கெனவே கிங் பிஷரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பணி நீக்க ஆணை வழங்கியுள்ளார். அவரும் தன முடியவை வாபஸ் பெறுவாரா... பார்க்கலாம்.
பிரதமர் அலுவலகம் நெருக்குதலா?:
இதற்கிடையே ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்குமாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஜெட் ஏர்வேஸ் அதிபர் கோயலுக்கு நெருக்கடி தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications