Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 ராஜ்யசபா திமுக எம்பிக்கள் ராஜினாமா-கருணாநிதியிடம் கடிதம்

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: இலங்கை விவகாரத்தில் கனிமொழியைத் தொடர்ந்து இன்று திமுக ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து முதல்வர் கருணாநிதியிடம் கடிதங்கள் அளித்தனர்.

இலங்கை தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவதை மத்திய அரசு 2 வாரத்துக்குள் தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கைக்கு ஆயுத உதவியை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழக எம்பிக்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்வர் என முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கெடுவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கெடு வரும் 29ம் தேதியுடன் முடிகிறது. இந் நிலையில் 29ம் தேதியிட்டு தனது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் வழங்கினார் கனிமொழி.

இந் நிலையில் ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து முதல்வர் கருணாநிதியிடம் கடிதங்கள் அளித்துள்ளனர்.

இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 14ம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கையில் இனப் படுகொலை கொடுமைக்கு உள்ளாகி ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களில் பூவும் பிஞ்சும் போன்ற குழந்தைகள் கூட கொல்லப்பட்டு தமிழ் இனம் பூண்டற்றுப் போகிற அளவுக்கு நிலைமை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

சிங்கள ராணுவத்தின் தாக்குதலை உடனடியாக நிறுத்திட இந்தியப் பேரரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு நிலையான அமைதி உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

"இந்த தீர்மானங்கள் செயல் வடிவம் பெறவும் இலங்கையில் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யவும் முயற்சி மேற்கொள்ள இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்பதை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது'' என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. தமது பதவியை ராஜினாமா செய்து 29.10.2008 தேதியிட்ட கடிதத்தை முதல்வர் கருணாநிதியிடம் அளித்தார்.

இதே போல திருச்சி சிவா, அ.அ.ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோர் தமது எம்.பி. பதவியை நேற்று ராஜினாமா செய்து 29.10.2008 தேதியிட்ட கடிதத்தை முதல்வர் கருணாநிதியிடம் நேரில் அளித்துள்ளனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த மக்களவை எம்பிக்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை கருணாநிதியிடம் வழங்குவார்கள் என்று கூறப்பட்டது.

29ம் தேதி வரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில் இந்தக் கடிதங்களை முதல்வர் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கும், மாநிலங்களவை துணைத் தலைவருக்கும் அனுப்புவார் என திமுக வட்டாரங்கள் தெரிவி்க்கின்றன.

மக்களவையில் திமுகவுக்கு 16 எம்பி்க்களும் மாநிலங்களவையில் 4 எம்பிக்களும் உள்ளனர்.

7 திமுக அமைச்சர்கள் பதவி இழப்பர்:

அப்படி நடக்கும்பட்சத்தில் மத்திய அமைச்சரவையில் உள்ள திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலு, ராசா, பழனிமாணிக்கம், சுப்புலட்சுமி ஜெகதீசன், ரகுபதி, வேங்கடபதி, ராதிகா செல்வி ஆகியோர் 7 பேரும் தங்களது அமைச்சர் பதவிகளை இழப்பர்.

பாமகவினரும்...

அதே போல பாமக எம்.பிக்களும் பதவிகளை ராஜினாமா செய்வர் எனத் தெரிகிறது. அந்த நிலையில் பாமகவைச் சேர்ந்த அன்புமணி, வேலு ஆகியோர் அமைச்சர் பதவிகளை இழப்பர்.

பாமகவுக்கு மக்களவையில் 5 எம்பிக்களும், மாநிலங்களவையில் ஒரு எம்பியும் உள்ளனர்.

காங் நிலை என்ன?:

ஆனால், இந்த விஷயத்தில் காங்கிரஸ் எம்பிக்களின் நிலை தான் சந்தேகமாக உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 10 எம்பிக்களும், மாநிலங்களவையில் 4 எம்பிக்களும் உள்ளனர்.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த 14 பேரும் ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், ராஜினாமா செய்வார்களா என்பது குறித்து கேள்விக்குறி நிலவுகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசுகையில், எம்பிக்கள் ராஜினாமா முடிவை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், இறுதி முடிவை மேலிடம்தான் எடுக்க வேண்டும் என்றார்.

ஆனால், தனது எம்பிக்களை ராஜினாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அனுமதிக்க வாய்ப்பில்லை. இப்போது சிறிய மெஜாரிட்டியுடன் தான் ஆட்சியில் நீடித்து வருகிறது மத்திய அரசு. இந் நிலையில் திமுக, பாமக, 2 மதிமுக எம்பிக்களின் ஆதரவும் போய், தனது 10 எம்பிக்களின் ஆதரவு இல்லாவிட்டால் மத்திய அரசை பாஜக-இடதுசாரிகள்- மாயாவதி கூட்டணி அமைத்து எந்த நேரமும் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்.

அதே நேரத்தில் ராஜினாமா விஷயத்தில் தனித்துவிடப்பட்டு, தமிழக மக்களின் மொத்த எதிர்ப்பையும் சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டால் அந்தக் கட்சியின் நிலை மாறலாம்.

இலங்கை விஷயத்தில் மத்திய அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆளாளுக்கு ஒரு கருத்தை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மதிமுக..:

மதிமுகவுக்கு 4 எம்பிக்கள் உள்ளனர். இதில் செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் திமுக கூட்டணியில் உள்ளனர். இவர்கள் திமுக எம்பிக்களுடன் தங்களது ராஜினாமா கடிதங்களை அளிக்கலாம் எனத் தெரிகிறது.

மேலும் மதிமுக எம்பிக்கள் இருவரும் விலகுவர் என அக் கட்சியின் தலைவர் வைகோ தெரிவித்துள்ளதால் அவர்களும் விலகவுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 எம்பிக்களும் உள்ளனர். இவர்களும் பதவி விலக தயாராக உள்ளனர்.

அதிமுக, பாஜகவுக்கு மக்களவையில் ஒரு எம்பி கூட இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+