போர் விளக்கம்: தனி தூதரை அனுப்பும் ராஜபக்ஷே!
கொழும்பு: இலங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்கள் நிலை பற்றியும் போர் நடவடிக்கைகள் குறித்தும் இந்தியாவுக்கு விளக்க இலங்கை அதிபர் ராஜபக்ஷே அடுத்த வாரம் தனி தூதர் ஒருவரை புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கிறார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் கடும் போர் புரிந்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான தமிழர்கள் உணவு, வசிப்பிடம் இல்லாமல் தாங்கள் வாழும் பகுதியில் இருந்து வெளியேறி அகதிகளாக அவதிப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் இந்த போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனற். இதற்கு தமிழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அந்நாட்டு அரசுடன் பேசி சுமூக முடிவுக்கு வழி காணும்படி மத்திய அரசுக்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் தீவிரமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் இலங்கையின் துணை தூதரை நேரில் வரவழைத்து போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதற்கும், பாதிக்கப் பட்ட தமிழர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருவதற்கும், இந்தியாவின் கவலையையும், அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்தார்.
போரில் எந்த காரணத்தைக் கொண்டும் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற இந்தியாவின் அக்கறையை அவரிடம் எம்.கே.நாராயணன் வெளிப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து இலங்கைக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத், நேற்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ரோகித போகல காமாவை நேரில் சந்தித்து போரால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்கள் குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலையை தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு தங்கள் நிலை மற்றும் போர் நிலவரங்களை விளக்குவதற்காக சிறப்புத் தூதர் ஒருவரை இலங்கை அதிபர் ராஜபக்ஷே அடுத்த வாரம் டெல்லிக்கு அனுப்பி வைக்கிறார்.
போரால் இடம் பெயர்ந்த தமிழர்களின் துயரங்களை போக்க இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்திய அரசிடம் விரிவாக எடுத்துரைப்பார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications