மின்வெட்டு 20 மணி நேரம் கிடையாது; ஆறரை மணிநேரமே! - ஆற்காடு வீராசாமி

இதுகுறித்து தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
ராசிபுரத்தில் பேசிய ஜெயலலிதா, மின்சாரம் இல்லாமல் தமிழ்நாடு இருளில் இருப்பதாக முழுக்க, முழுக்க உண்மைக்கு மாறாக பேசியுள்ளார்.
அ.தி.மு.க ஆட்சியில் 1236 மெகாவாட் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு விற்றதாக கூறியுள்ளார். ஆனால், 1991-96ல் அவரது ஆட்சிக்காலத்தில் பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்தது தினமும் 15 மெகாவாட் மின்சாரம்தான். ஆனால், தி.மு.க. ஆட்சியில் 2006-07ல் 102 மெகாவாட் மின்சாரம் தினமும் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்திருக்கிறோம்.
கடந்த 2 ஆண்டுகளாக பல புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், வீடுகள், போன்றவைகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதால், மின்சார பயன்பாடு பல மடங்கு உயர்ந்து, மின்சார தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.
அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் 3430 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய வழி செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் ஜெயலலிதா ஆட்சியில் (2001-2006 வரை) நிறுவப்பட்ட புதிய மின் உற்பத்தித்திறன் 43 மெகாவாட் மட்டும்தான்.
முதல்வர் கருணாநிதி, 2006-ல் ஆட்சிக்கு வந்த பிறகுதான் வட சென்னையில் 1200 மெ.வா., வடசென்னையில் மத்திய அரசு மூலம் 1500 மெ.வா, மேட்டூரில் 600 மெ.வா., தூத்துக்குடியில் 1000 மெ.வா., உடன்குடியில் 1600 மெ.வா. மின் உற்பத்தி செய்வதற்கான புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு அவைகள் 2010-ல் செயல்பட உள்ளன.
ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் ஒரு திட்டமும் தீட்டப்படாமல் மக்களிடத்தில் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்யும் ஜெயலலிதாவைப் பற்றி மக்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும், நாள்தோறும் தமிழகத்தில் 20 மணி நேர மின்வெட்டு இருப்பதாகவும், தமிழ்நாடு இருளில் இருப்பதாகவும் பேசி வருகிறார்.
ஆறரை மணி நேரம்:
2008, அக்டோபர் 1-ந் தேதி முதல் சென்னையில் தினமும் ஒன்றரை மணி நேரமும், புறநகர்களில் இரண்டு மணி நேரமும், மற்ற பகுதிகளில் ஆறரை மணி நேரமும் மின்தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகமெங்கும் மின் தடை அமல்படுத்தப்படுகிறதே தவிர, ஜெயலலிதா கூறுவதைப் போல தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் 20 மணிநேரம் மின் தடை செய்யப்படுவதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications