இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம்-நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தல்
டெல்லி: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் திமுக வலியுறுத்தியது.
அக் கட்சியின் எம்.பியான செ.குப்புசாமி நேற்று நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் கிளப்பினார். அவர் கூறியதாவது:
இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருவதால் சுமார் 2 லட்சம் தமிழ்க் குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உணவு, உடை, குடிநீர் இன்றி தவிக்கிறார்கள். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய பகுதிகளில் தமிழ்க் குடும்பங்கள் வாழ்வாதாரத்தையே இழந்துவிட்டன.
முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் மேற்கொண்ட முடிவின்படி, பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய அரசும் வரும் 29ம் தேதிக்குள் இலங்கை தமிழர் பிரச்சினையிலும் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தவும் நடிவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் அனைவரும் பதவி விலக முடிவு செய்துள்ளனர்.
எனவே, இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு ஏற்படவும், உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
'தனி ஈழம்'-உடன்பாடில்லை: மார்க்சிஸ்ட்
இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில்,
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
இலங்கை அரசு மீது இந்திய அரசு ராஜீயரீதியான நிர்ப்பந்தத்தை செலுத்தி, ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து பேச்சுவார்த்தை மூலம் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண முயல வேண்டும்.
2 வார காலத்திற்குள் மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தின் தீர்மானங்களை செயல்படுத்தவில்லை எனில், தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய நேரிடும் என்ற தீர்மானம் முன்மொழியப்பட்ட போது அக்கூட்டத்திலேயே மார்க்சிஸ்ட் கட்சி பிரதிநிதிகள், இது ஒவ்வொரு கட்சியும் சுயேட்சையாக முடிவெடுக்க வேண்டிய பிரச்சினை என்று தெளிவுபடுத்தி உள்ளனர்.
இன்று தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகளும், இதர சில அமைப்புகளும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தனித்தமிழ் ஈழமே தீர்வு என்று நிலை எடுத்திருப்பது மார்க்சிஸ்ட் கட்சிக்கு உடன்பாடற்ற ஒன்று.
இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் ஆயுத மோதலை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications