பூனை குட்டி வெளி வந்துவிட்டது-விஜய்காந்த்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்த கதையைப் போல, இதுவரை மணிக்கணக்கில் நிறுத்தப்பட்ட மின்சாரத்தோடு இனி பயன்படுத்தும் மின்சாரத்திலும் மின்வெட்டு அமலாகியுள்ளது.
வீடுகளுக்கு தரும் மின்சாரத்தில் 20 சதவீதமும், தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 40 சதவீதமும் நவம்பர் 1ம் தேதி முதல் தமிழக அரசால் குறைக்கப்படுகிறது.
இதை மீறி மின்சாரம் பயன்படுத்தினால் 50 சதவிகித அளவுக்கு கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டும். இதன்மூலம் மின்சாரப் பயனீட்டாளர்கள் மின்சாரத்தை உபயோகிக்கும் அளவு திடீரென குறைக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு எவ்வளவு மின்சாரப் பற்றாக்குறை என்று திரும்பத் திரும்ப நான் கேட்டும் வெள்ளை அறிக்கை தரவேண்டும் வலியுறுத்தியும் முதல்வர் அதைக் கண்டுக் கொள்ளவில்லை. சுமார் 2,000 மெகாவாட் இருந்தால் தற்போதைய பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்கலாம் என்று சொன்னேன்.
இதற்கான பெரிய அனல் மின் திட்டங்களை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2004ம் ஆண்டில் போட்டிருக்க வேண்டுமென்றும் கூறினேன். இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தி மக்களை வேண்டுமென்றே குழப்பினார்கள்.
ஆனால், இப்போது தமிழக அரசின் சார்பில் ஈடுசெய்யவே இந்த அறிவிப்பு என்று பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. கடைசியாக பூனைக் குட்டி இதன் மூலம் வெளிவந்துவிட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி தற்காலிகமானது அல்ல. இது இன்னும் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கக் கூடிய வாய்ப்பு உடையது மட்டுமல்ல, இன்னும் தீவிரமாகக் கூடியதுமாகும். இதை தீர்ப்பதற்கான எந்தத் திட்டங்களும் இந்த அரசாங்கத்திடம் இல்லை.
போகப்போக மக்களை மின்சார பற்றாக்குறையின் மூலம் வாட்டி வதைக்கவே முற்படுவார்கள். இதில் இன்னும் என்ன வேதனைக்குரியது என்றால், தருகின்ற மின்சாரத்திற்கும் கூடுதல் கட்டணம் விதித்து அரசு சம்பாதிக்க நினைக்கும் கையாலாகாதத்தனம் தான்.
உலகமெங்கும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியா வையும் பாதித்துள்ளது. இதன் விளைவாக மக்கள் கையில் பணமில்லை. விலைவாசி உயர்வால் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. வாங்கும் சக்தி அமைச்சர்களுக்கு வேண்டுமானால் அதிகரித்திருக்கலாம்.
ஆனால் மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரிக்கவில்லை. அதற்கு பதிலாக மக்களிடையே வறுமை அதிகரித்து விட்டது. பணப்புழக்கத்தை அதிகரிக்க மத்திய ரிசர்வ் வங்கி வட்டியை 1 சதவீதம் குறைத்துள்ளது.
இதன் மூலம் வங்கிகளிலிருந்து கிடைக்கும் கடன்களுக்கு வட்டித் தொகை குறையும். மக்கள் கையில் உள்ள பணம் அதிகரிக்கும். இதன் மூலம் வளர்ச்சி ஏற்படும் என்று இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு நேர்மாறாக மக்கள் கையிலுள்ள பணத்தைச் சுரண்டும் வகையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதை பைத்தியக்காரத்தனம் என்று சொன்னால் அளவுக்கு மீறி பேசியதாக ஆகிவிடுமோ என்று அஞ்சுகிறேன்.
இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் மின்சாரப் பற்றாக்குறை இருப்பதாகவும், மற்ற மாநிலங்களில் மின்சாரத் தடையே கிடையாது என்றும் பொய் கூறி அரசியலுக்காகப் பேசுவதாக முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டுகிறார்.
இந்தியாவில் மின்வெட்டு சராசரி 15 சதவிகிதமென்றால், தமிழ்நாட்டில் 40 சதவிகிதம் அளவு மின்சாரப் பற்றாக்குறை உள்ளது. பக்கத்து மாநிலங்களில் பாயாசத்திற்கு பஞ்சமென்றால், தமிழ்நாட்டில் சோற்றுக்கே பஞ்சம். கருணாநிதி இதை மூடிமறைக்கிறார் என்பதை அரசியல் தெரிந்தவர்கள் தெரிந்துக் கொண்டிருப்பார்கள்.
இன்று ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி, தமிழ்நாட்டில் மக்களின் அன்றாட வாழ்க்கையையும், ஈடுபடும் தொழிலையும் அறவே பாதித்து விட்டது.
மின்சாரம் என்பதை மக்களின் வாழ்க்கையில் மறந்தே போய் விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தற்காலத்திலிருந்து கற்காலத்திற்கு தமிழ்நாட்டைக் கொண்டு வந்த பெருமை ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் உண்டு.
இந்த நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்று தமிழக அரசுக்கு தெரியாமல், மின் பற்றாக்குறையையும், மின்சார வாரியம் திவால் ஆவதையும் மக்கள் தலைமேல் சுமத்தியிருக்கிறார்கள். பூட்டை, சாவி கொண்டு திறப்பதற்கு பதிலாக சம்மட்டி கொண்டு அடிப்பதைப் போலத்தான் இன்றைய அரசின் நடவடிக்கை உள்ளது.
வாழ வைக்க வேண்டிய ஒரு அரசு மக்களை வாட வைக்கிறது என்றால், அந்த ஆட்சி யாருக்காக நடைபெறுகிறது என்பதே என்னுடைய கேள்வி. அரசு வெறும் வாயை மென்று பிரயோஜனமில்லை என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications