தீபாவளி பண்டிகை: ஜெயலலிதா, சரத்குமார் வாழ்த்து
சென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தீபாவளி திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகில் மண்டிக் கிடக்கும் இருளை மக்கள் ஏற்றி வைக்கும் ஒளி அழித்து விடுகிறது. அதே போல், மானிடர்கள் உள்ளத்தில் சூழ்ந்திருக்கும் அறியாமையாகிய இருளை அழித்து அறிவொளி ஏற்ற வேண்டும் என்பதே தீபாவளி கொண்டாடுவதன் நோக்கம்.
இந்தத் தீபாவளி நன்னாளில் தமிழக மக்களை கவ்வியுள்ள இருள் அகன்று, அனைவரது வாழ்விலும் ஒளி, இன்பம், மகிழ்ச்சி ஆகியவை பெருகுவதற்கான சூழ்நிலை விரைவில் உருவாக வேண்டும் என்னுடைய அவாவினை தெரிவித்து எனதருமை தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்
சரத்குமார்:
சரத்குமார் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பண்டிகைகள் நம்மைச் சுற்றி எத்தனை இன்னல்கள் சூழ்ந்திருந்தாலும், அந்த இறுக்கத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டு உற்றார், உறவினர், நண்பர்களோடு குதூகலமாக இருக்க வைக்கும் தருணங்கள்.
2008ம் ஆண்டில், உலக நாடுகள் பொருளாதார பின்னடைவு, விலைவாசி உயர்வு, தீவிரவாத தாக்குதல்கள் போன்ற பல்வேறு சோதனைகளைச் சந்தித்து வருகினற்ன.
நாமும் அதற்கு விதி விலக்கல்ல என்கிற நிலையில் என்றும் இல்லாத அளவிற்கு மின்சார வெட்டு, விலைவாசி உயர்வு, வன்முறைத் தாக்குதல்கள் என்று அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிற சூழ்நிலையில் இந்த தீபாவளி திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரவேண்டும்.
அதே நேரத்தில், இலங்கை மண்ணில் மீண்டும் அமைதி திரும்பி, நம் தொப்புள்கொடி உறவான இலங்கை தமிழர்களும் மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்று இந்த தீபாவளி திருநாளில் நாம் அனைவரும் ஒன்றுகூடி பிரார்த்திப்போம்.
இலங்கையிலிருந்து வந்திருக்கும் தூதுக்குழுவினர் இந்திய அரசுடன் பேசி எடுத்திருக்கும் முடிவுகள், ஒரு நல்ல மாற்றத்தின் துவக்கமாக அமைந்து இலங்கை மண்ணில் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்த திருநாளில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆளுநர் பர்னாலா:
ஆளுநர் பர்னாலா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மத நல்லிணக்கம், ஒற்றுமை, அன்பு, ஒட்டுமொத்த வளத்தை சேர்க்கும் நாளாக தீபாவளி அமையட்டும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்தில், அமைதிக்கும், மத நல்லிணக்கத்திற்கும் எதிராக செயல்படும் சக்திகளை வதம் செய்திட தேவையான வலிமையை தீபாவளித் திருநாள் அளிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அரசு வாழ்த்து:
தீபாவளியையொட்டி இங்கிலாந்து அரசு இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் வெளியிட்டுள்ள செய்தியில், உலகளாவிய அளவில் மிகப் பெரும் சவால்களை நாம் சந்தித்து வரும் இவ்வேளையின் தீபாவளி பண்டிகையின் தத்துவம் அனைத்து மதத்தினருக்கும் பொருத்தமானதாக அமைந்துள்ளது.
தீய சக்திகளை நல்ல சக்திகள் வெற்றி கொள்வதை குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது தீபாவளி. அதேபோல உலகை சூழ்ந்துள்ள இருள் மறைந்து பிரகாசம் நிறைய இந்த நாளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தெற்காசிய நாடுகளில் பெருமளவில் கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி உள்ளது. தெற்காசியர்களால் இங்கிலாந்து பல பலன்களை அடைந்துள்ளது, வளம் பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.
அதே போல அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும் இந்திய மக்களுக்கு தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications