மாலேகான்-2 ராணுவ பள்ளி ஊழியர்கள் கைது
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ராணுவப் பள்ளி ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் அடுத்தடுத்து பலரைக் கைது செய்து வருகின்றனர்.
முதலில் இந்து ஜாகிரண் மஞ்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 2 பேர் முன்னாள் ராணுவத்தினர் ஆவர். இந் நிலையில் நாசிக்கைச் சேர்ந்த போன்ஸாலா ராணுவப் பள்ளியை நடத்தி வந்த ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கர்னல் ஷைலேஷ் ரெய்க்கர் என்பவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு இவர் கைது செய்யப்பட்டார். குண்டுவெடிப்புக்கு முதல் நாள் (செப்டம்பர் 28) இவரும், பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவரான சமீர் குல்கர்னி, ரமேஷ் உபாத்யாயா ஆகியோரும் சந்தித்துப் பேசியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதே ராணுவப் பள்ளியைச் சேர்ந்த ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்த விவரத்தை போலீஸார் வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications