20ம் தேதி வாஷிங்டனில் பிரதமர்-ஒபாமா சந்திப்பு?
டெல்லி: வரும் 15ம் தேதி வாஷிங்டனில் நடக்கும் ஜி-20 நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள பராக் ஒபாமவை சந்தித்துப் பேசுவார் எனத் தெரிகிறது.
ஜனவரி 20ம் தேதி தான் ஒபாமா பதவியேற்கவுள்ளார். இருப்பினும் ஜி-20 கூட்டத்துக்குச் செல்லும் உலகின் முக்கிய 20 நாடுகளின் தலைவர்களில் பெரும்பாலானவர்களை ஒபாமாவை சந்திக்க நேரம் கோரியுள்ளனர்.
மன்மோகன் சிங்கும் ஒபாமா சந்திக்க நேரம் கோரியுள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
14ம் தேதி அங்கு செல்லும் சிங் அன்றிரவு ஜி-20 நாடுகளன் தலைவர்களுடன் டின்னரில் பங்கேற்கிறார். மறுநாள் மாநாட்டில் பங்கேற்கிறார். அதே தினம் நாடு திரும்புகிறார்.
ஒரே ஒரு நாள் தான் அங்கு அவர் இருக்கப் போகிறார் என்ற நிலையில் அமெரிக்க அதிபர் புஷ், ரஷ்ய, சீன, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி நாட்டுத் தலைவர்களுடன் தனித்தனியே பேசிவிட்டு ஒபாமைவை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இந்தச் சந்தி்ப்பு தனிப்பட்ட சந்திப்பாக இருக்கும் என்கின்றனர்.
இந்தியா வர அழைப்பு:
இதற்கிடைய அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒபாமாவுக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு இந்தியா வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தனது வாழ்த்து செய்தியில், அமெரிக்க மக்கள் உங்களை அதிபராக தேர்வு செய்ததை ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக இந்திய மக்கள் கருதுகின்றனர். புதிய அதிபராக பொறுப்பு ஏற்கும் தங்களின் வெற்றிக்கு வாழ்த்துவதோடு, விரைவில் இந்தியா வருமாறு அழைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில்,
வெள்ளை மாளிகையை நோக்கி நீங்கள் மேற்கொண்ட போராட்டப் பயணம் அமெரிக்க மக்களை மட்டுமல்ல அனைத்து நாட்டு மக்களையும் ஈர்த்தது என்பதே உண்மை.
சுதந்திரம், நீதி, தனி மனித உரிமை, பன்முகத்தன்மை, ஜனநாயகம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட்டது இந்திய-அமெரிக்க உறவு.
இந்த உறவு வலுப்பட உங்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். தாங்கள் இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு விரைவில் வரும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
பார்ப்போம்... இடதுசாரிகள்:
ஒபாமாவின் வெற்றியை வரவேற்றுள்ள இடதுசாரிகள், அவரைப் பற்றி இப்போது ஏதும் கருத்து சொல்ல முடியாது என்று கூறியுள்ளன.
அமெரிக்காவின் வரலாற்றில் இது ஒரு முக்கிய திருப்பம் என்பதிலும், புஷ்ஷின் கொள்கைகள் மக்களிடம் மொத்தமாக தோற்றுப் போய்விட்டதும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று கூறியுள்ள இடதுசாரிகள், அமெரிக்காவின் வெளியுறவு, பொருளாதார கொள்கைகளை ஒபாமா பெரிய அளவில் மாற்ற வேண்டும்.
நானே எல்லாம் என்ற அதிகார குவிப்பு வேலையில் இருந்து அமெரிக்கா திருந்த வேண்டும். ஆனால், அவரது பிரச்சாரத்தில் வெளியுறவு கொள்கைகள் பற்றியோ இந்தியா பற்றியோ பெரிதாக அவர் பேசவில்லை. இதனால் பெரிய அளவில் மாற்றங்கள் வருவது சாத்தியமில்லை என்று கூறியுள்ளனர்.
சரித்திர முக்கியத்துவம்: அத்வானி
திருப்பதியில் தரிசனம் செய்ய வந்த பாஜக தலைவர் அத்வானி கூறுகையில், அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.
கருணாநிதி வாழ்த்து:
ஒபாமாவுக்கு முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில்,
உங்களை தேர்ந்தெடுத்திருப்பதன் மூலமாக, அமெரிக்க மக்கள் ஒரு மாபெரும் மாற்றத்தை விரும்புவதை தெரிவித்துவிட்டனர்.
தென்னாப்பிரிக்க சிறையில் 27 ஆண்டுகள் அடைபட்டிருந்து விடுதலை பெற்ற நெல்சன் மண்டேலா அந்நாட்டின் ஆட்சி பொறுப்புக்கு வந்தபோது வெள்ளை இருட்டில் கறுப்பு நிலா' என்று வர்ணனை செய்து வாழ்த்தினேன்.
இதோ; உலக நாடுகளுக்கு எல்லாம் உச்சநாடு என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்த அமெரிக்காவில் அன்று ஆப்ரகாம் லிங்கன் கண்ட கனவு பலித்தது என்பது போல;
அந்த ஆதிக்கபுரியில் அடிமைகளின் தலைவனாக எழுந்த பராக் ஒபாமா பெற்றுள்ள பெருமித வெற்றி, அடிமைபட்டிருந்த இனத்துக்கு இருள் நீக்கும் அருணோதயம்.
உலக வரலாற்றுக்கான ஒப்பற்ற முன்னுரை; கறுப்பு வண்ணத்தால் எழுதப்பட்டதுமான எழுச்சி முரசம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications